சென்னை:சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஐந்து இடங்களில் மட்டும் 112 அடி உயரத்தில் பிரம்மாண்ட மேம்பால ரயில் பாதை அமைக்க உள்ளது. இதற்காக, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்திடமிருந்து சிறப்பு அனுமதியை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற உள்ளது.
சென்னையில் அடுத்தகட்டமாக, மாதவரம் - சிப்காட்; மாதவரம் - சோழிங்கநல்லுார்; கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி சாலை என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சில மாதங்களாக ஆரம்ப கட்ட பணிகளே நடந்து வந்த நிலையில், தற்போது மேம்பாலம் இணைப்பு, சுரங்கப்பாதை அமைப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பு போன்ற, முக்கியமான பணிகள் நடக்கின்றன.
இதில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
சில இடங்களில், ஏற்கனவே இருக்கும் மெட்ரோ ரயில் பாதையின் மேல் வழியாகவும், ரயில்வே பாதையின் மேல் வழியாக மேம்பால ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் மற்றும் ரயில்வே மேம்பால பகுதிகளில், உயரமான மெட்ரோ மேம்பால பாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, கத்திப்பாரா மேம்பாலம் அருகே இரண்டு, வடபழநி, ஆதம்பாக்கம், கோயம்பேடு பகுதியில் தலா ஒன்று என மொத்தம் ஐந்து இடங்களில் 112 அடி உயரத்தில், மேம்பால மெட்ரோ ரயில் பாதை அமைக்க உள்ளோம்.
இதற்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்திடம் சிறப்பு அனுமதியை பெற உள்ளோம். உரிய அனுமதி பெற்ற பின், மேற்கண்ட இடங்களில் பணியை துவக்க உள்ளோம். ஏற்கனவே திட்டமிட்டப்படி, ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகளையும், 2026ல் முடிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.