தாம்பரம் தாம்பரம் மாநகராட்சியில், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள, துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடனேயே வேலை செய்கின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் குப்பை அகற்றும் பணி, ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், மாநகராட்சி முழுதும், ஆயிரத்திற்கும் அதிகமான தற்காலிக துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாடகை கட்ட முடியாமலும், மளிகை பொருட்களை வாங்க முடியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன், முறையாக ஊதியம் வழங்கக்கோரி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, கமிஷனராக இருந்த இளங்கோவன், ஊழியர்களுடன் பேச்சு நடத்தி, மாதந்தோறும், 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஊறுதியளித்தார்.
இந்த நிலையில், இரண்டு மாதங்களாக ஊதிய பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, தேதி 10 ஆகியும் ஊதியம் வழங்கப்படவில்லை.
இப்பிரச்னை மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா கவனத்திற்கு சென்றும், ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இனியாவது, இப்பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு, மாதந்தோறும் சரியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.