வால்பாறை: வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ்மொழியில் கல்வி கற்கின்றனர்.
வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், தொழிலாளர்களுக்கு குறைவான கூலி வழங்கப்படுவதாலும், வனவிலங்கு -- மனித மோதல் அதிகரித்துள்ளதாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.
அவர்கள், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில், மாற்று தொழில் தேடி இடம் பெயர்ந்து விட்டனர்.
இதனால், இங்குள்ள எஸ்டேட்களில் தேயிலை பறிக்க ஆள் இல்லாத நிலையில், அசாம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் கல்வி கற்கின்றனர். குறிப்பாக, வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில், அதிக அளவில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதிப்பிரியா கூறியதாவது:
வால்பாறை தாலுகாவில், மொத்தம், 42 அங்கன்வாடி மையங்களில், 685 குழந்தைகள் படிக்கின்றனர். இதில், 300க்கும் மேற்பட்ட வெளிமாநில குழந்தைகள் படிக்கின்றனர்.
இவர்கள், தமிழ் படிக்கவும், வாசிக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிமாநில குழந்தைகள் அதிக அளவில் அங்கன்வாடியில் கல்வி பயின்றாலும், அங்கன்வாடி பணியாளர்கள் அவர்களை அரவணைத்து, சிறந்த முறையில் ஆரம்ப கல்வியை கற்றுத்தருகின்றனர்.
இவ்வாறு, கூறினார்.