நெய்வேலி : நெய்வேலி இந்திரா நகரில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை எம்.எல்.ஏ.,பார்வையிட்டார்.
நெய்வேலி இந்திரா நகர் மற்றும் வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அரசு மருத்துவமனை இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 10 கி.மீ., தொலை விலுள்ள வடலூர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டி யுள்ளது. கர்ப்பிணி பெண்கள் வெங்கடாம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
இதன்காரணமாக, சபாராஜேந்திரன் எடுத்துள்ள முயற்சியின் பேரில், இந்திரா நகர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏ., நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று புதிய மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தார்.
இதில் பொதுப்பணித்துறை கட்டிட பொறியாளர் பரிமளா, உதவி பொறியாளர்கள் சிவசங்கரி, திவ்யபாரதி, இந்திரா நகர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, வடக்குத்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.