அன்னூர்: அன்னூரில் வேகத்தடை இல்லாததால் உயிர் பயத்துடன் மாணவர்கள் சாலையை கடக்கின்றனர்.
அன்னூர் -- அவிநாசி ரோட்டில், 1.5 கி.மீ., தொலைவில் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி முன் சைக்கிளில் சென்ற மாணவர் லாரி மோதி இறந்தார்.
இதையடுத்து உடனடியாக பள்ளியின் வாசல் முன்புறம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் அச்சமின்றி சாலையை கடந்து வந்தனர்.
ஓராண்டுக்கு முன் நீலகிரி மாவட்டத்திற்கு வி.வி.ஐ.பி., சென்றார். அப்போது வேகத்தடை அகற்றப்பட்டது. அதன் பிறகு ஓராண்டாகியும் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் வரை நாங்கள் அச்சத்துடனே இருக்கிறோம். அவிநாசி சாலையில், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன.
அதுவும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. பள்ளியின் முன்புறம் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம்.
எனினும் இதுவரை வேகத்தடை அமைக்கவில்லை. மீண்டும் ஒரு விபரீதம் நடக்கும் முன் அதிகாரிகள் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.