அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய, இரு தரப்பிலும் சமாதான முயற்சி துவங்கி உள்ளது. அ.தி.மு.க., தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும், பா.ஜ., தரப்பில், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதியும், இரு கட்சி உறவை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சிலர், அ.தி.மு.க.,வில் இணைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே திடீர் உரசல் துவங்கியது. அ.தி.மு.க.,வில் சேர்ந்த பா.ஜ.,வினர், மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதும், விவகாரம் பெரிதாக வெடித்தது.
பின்னடைவு
பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய பா.ஜ., நிர்வாகிகள் பலர், ஆங்காங்கே அவரது படத்தை எரித்தனர். எதிர் நடவடிக்கையாக, அண்ணாமலை படத்தை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர்.
இதையடுத்து, இரு கட்சி நிர்வாகிகளும், கூட்டணி உறவை மறந்து, ஒருவரை ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். இது மோதலாக உருவெடுத்து வலுக்க துவங்கியதும், இரு கட்சி உறவை விரும்பும் தலைவர்கள் கவலை அடைந்தனர்.
இரு கட்சிகள் இடையே மோதல் தொடர்வது, வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதில், பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சுகின்றனர்.
இதற்கிடையில், அ.தி.மு.க., உடனான மோதல், பா.ஜ., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டம் ஆகியவை குறித்து, அண்ணாமலை, பா.ஜ., மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகம், மகளிரணி தேசிய தலைவர் வானதி ஆகியோரிடம், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் விசாரித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, இரு தரப்பிலும் சமாதான முயற்சி துவக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கோவை தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ஆகியோர், இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க., முக்கிய தலைவர்களிடம் வானதியும், பா.ஜ., தலைவர்களிடம் வேலுமணியும், தங்கமணியும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வானதி கூறியதாவது:
பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பலமான கூட்டணியாகவே உள்ளோம்; வரும் தேர்தல்களிலும் தொடர்வோம். கடந்த சில நாட்களாக, விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பா.ஜ., தேசிய தலைமை, விரைவில் இதற்கு தீர்வு காணும்.
வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்தி, அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு. இதற்கு வரும் இடையூறுகளை, இரு கட்சிகளிலும் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
சமாதான முயற்சியை தொடர்ந்து, 'அ.தி.மு.க.,வினர் யாரும் பா.ஜ.,வை விமர்சிக்க வேண்டாம். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தான் தேவையற்ற கருத்துக்களை கூறுகின்றனர்.
'அக்கட்சி தலைமை நம்முடன் இணக்கமாகவே உள்ளது. எனவே அனுசரித்து செல்வோம். அதேநேரம், எந்த கட்சியில் இருந்து யார் வருவதாக இருந்தாலும், அழைத்து வாருங்கள்' என, கட்சியினரிடம் பழனிசாமி கூறியுள்ளார்.
சலசலப்பு
அதை வெளிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ''பா.ஜ.,வுடன் எந்த மோதலும் இல்லை. ஏதோ பக்குவப்படாதவர்கள் சிலர் கருத்துக்கள் கூறினர். அதற்கு நாங்களும் கருத்து கூறி விட்டோம்; கூட்டணி தொடர்கிறது.
''கூட்டணி கட்சி குறித்து, நாங்கள் சர்ச்சையான கருத்து எதையும் கூறவில்லை,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், ''கூட்டணி கட்சியில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும், தேசிய நலன் கருதி, இக்கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்பது, எங்கள் கட்சி பொதுச் செயலர் பழனிசாமிக்கு தெரியும். அவர் பின்னால் நாங்கள் நிற்போம்,'' என்றார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு அளித்த பேட்டி:பா.ஜ.,வினருக்கு சகிப்புத்தன்மை, வாய் அடக்கம் தேவை. வாய் கொழுப்போடு பேசக் கூடாது. மத்தியில் ஆளுகிறோம் என்ற திமிரோடு பேசக் கூடாது.கூட்டணி கட்சி என்பதற்காக, தோளில் உட்கார்ந்து காதை கடிப்பதை, அ.தி.மு.க., ஏற்காது. ஒரு காலத்தில் பா.ஜ.,வினர் மதிக்கக் கூடியவர்களாக இருந்தனர்; இன்று தகுதி அற்றவர்கள், விஷக்கிருமிகளாக இருக்கின்றனர். இவர்களை அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலையே, வாய் கொழுப்பாக பேசுகிறார்.பொது வாழ்க்கையில் இருந்து தலைவராக வர வேண்டும். சிலர் மூன்று பட்டம் வாங்கியதால், நாம் தான் பெரிய ஆள் என நினைப்பதால், இதுபோன்ற தவறு நடக்கிறது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -