மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த, 6ம் தேதி தேரோட்டமும், 7ம் தேதி தீ பந்த சேவையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், தீ பந்தம் எடுத்து வந்து, நேர்த்தி கடனை செலுத்தினர்.
எட்டாம் தேதி இரவு, 10:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், பெரிய ஷேச வாகனத்தில் எழுந்தருளி, தேர் செல்லும் வீதிகள் வழியாக, தோலம்பாளையம் ரோட்டில் உள்ள, கருட தீர்த்தம் என்னும் தெப்பக்குளத்திற்கு வந்தார்.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் மின் அலங்காரம் செய்த தேரில், சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.