செஞ்சி : செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலையில், அத்தியூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் லைக்கா நிறுவனம் சார்பில் 'லால் சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.
கடந்த 1990ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அருகிலுள்ள ஊரில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் அத்தியூர் கிராமத்தில் படமாக்கப்பட உள்ளது. இங்கு 40 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த உள்ளனர். படப்பிடிப்புக்காக அத்தியூரில் கிராமத்தின் தெருக்களை 1990ம் ஆண்டிற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்.
சினிமா படப்பிடிப்பை நேரில் பார்த்திராத அத்தியூர் கிராம மக்கள் திரும்பிய பக்கமெல்லாம் காணப்படும் திரைத்துறையினரின் வாகனங்கள், கேரவன்கள், ஜெனரேட்டர்களை பிரமிப்பாக பார்த்து வருகின்றனர்.
போலீசார் 'மிஸ்சிங்'
படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்பிற்காக 20க்கும் மேற்பட்ட வாட்ட சாட்டமான நபர்கள் (பவுன்சர்கள்) கைகளில் 'வாக்கி டாக்கி'யுடன் கிராமம் முழுவதும் காணப்படுகின்றனர்.
இவர்கள் கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். படப்பிடிப்பிற்காக பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்தை நிறுத்துகின்றனர். கிராம மக்கள் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாமல் கட்டுப்பாடு விதித்து திருப்பி அனுப்புகின்றனர்.
நாளடைவில் இது கிராம மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே படபிடிப்பு நடத்தும் இடத்தில் படப்பிடிப்பு குழுவினருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.