''இப்படியே இருந்தா, வடசென்னையை கோட்டை விட்டுடுவான்னு சொல்றா ஓய்...'' என்றபடியே, மெதுவடையை கடித்தார் குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''போன, 2019 லோக்சபா தேர்தல்ல, வடசென்னையில, தி.மு.க., சார்புல நின்ன கலாநிதி வீராசாமி, 4.61 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்துல அமோகமா ஜெயிச்சார்... ஆனா, நாலு வருஷமா அவரது செயல்பாடு சொல்லிக்கற மாதிரி இல்லை ஓய்...
![]()
|
''இருந்தாலும், 2024 தேர்தல்லயும் அவருக்கே சீட் கிடைக்கும்னு ஆளுங்கட்சியில சொல்றா... இந்த எம்.பி., தொகுதிக்குள்ள வர்ற திருவொற்றியூர், ஆர்.கே., நகர், ராயபுரம் ஆகிய மூணு சட்டசபை தொகுதிகள்லயும், மீனவர் சமுதாய ஓட்டுகள் அதிகம் இருக்கு ஓய்...
''போன தேர்தல்ல இந்த சமுதாய ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு தான் விழுந்துது... ஆனா, ஆட்சியிலயும், கட்சியிலயும் இந்த சமுதாய மக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தராததால, அவாள்லாம் விரக்தியில இருக்கா... இதை, ஆளுங்கட்சி கவனிச்சு சரி பண்ணலன்னா, அடுத்த தேர்தல்ல கரையேறுவது கஷ்டம் தான் ஓய்...'' என்றார், குப்பண்ணா.