உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் கட்சியை வழி நடத்திச் செல்ல, இன்று நல்ல தலைவர்களும் இல்லை; தொண்டர்களும் இல்லை' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை; அது, நுாற்றுக்கு நுாறு சதவீதம் உண்மை! இந்திரா காலத்தில், காங்., மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. அவரது மறைவுக்குப் பின், தன் செல்வாக்கை இழக்கத் துவங்கியது. ஒரு கால கட்டத்தில், நாடு முழுதும் காங்., ஆட்சி நடந்த நிலை மாறி, இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், 'பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பிடித்த கட்சி' என்ற பெயரெடுத்தாலும், காங்கிரசால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ராகுல் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டும் பலனில்லை; அவரால் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியவில்லை. சமீபத்தில், வடகிழக்கு மாநிலங்கள் மூன்றில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், காங்., படுதோல்வி அடைந்து விட்டது.
நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன், மன்மோகன் சிங் தலைமையில், மத்தியில், 10 ஆண்டுகள் பதவியில் இருந்த காங்., அரசு மீது, அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் கூறப்பட்டதே, இந்த மோசமான நிலைக்கு காரணம். காங்., ஆட்சி ஊழலில், முதன்மையானதாக கருதப்பட்டது, தி.மு.க.,வைச் சேர்ந்த ஆ.ராஜாவால் செய்யப்பட்ட, '2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை மோசடி.
அதேநேரத்தில், மோடி பிரதமரான பின், மத்திய அரசு மீது எந்த ஊழல் புகாரையும், யாராலும் சொல்ல முடியவில்லை. இடையில், ராகுல் போன்றவர்கள் சில பொய் புகார்களை அவிழ்த்து விட்டாலும், அவை, 'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும், எட்டு நாளிலே புரிஞ்சு போகுமே' என்பதற்கு ஏற்ப, சில நாட்களிலேயே புஸ்வாணமாகி விட்டன.
அதனால், 'மோடியை எதிர்க்க வேண்டும்எனில், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் எனில், மாநில கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்' என, ராகுல் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் வாயிலாக, மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, கணிசமான இடங்களை பிடித்து, ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர் ராகுலும், மற்ற காங்., தலைவர்களும்.

அவர்கள் நினைப்பது போல, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம். அப்படியே திரண்டு மத்தியில் காங்., ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவானால், அதற்கேற்ற இடங்களை பெற்றால், மீண்டும் ஊழல் ராஜ்ஜியம் கொடிக்கட்டிப் பறப்பது நிச்சயம்.
அதாவது, மன்மோகன் ஆட்சியில் ஒரு ஸ்பெக்ட்ரம் ராஜா தான் உருவானார்; ஆனால், மீண்டும் காங்., அரசு அமைந்தால், பல ஊழல் ராஜாக்கள் கோலோச்சுவர் என்பதில் சந்தேகமில்லை. எனவே, பா.ஜ.,வுக்கு போட்டியாக பலமான எதிரணி என்ற பசப்பு வார்த்தைகளை, மக்கள் நம்பாமல் இருப்பதே நாட்டிற்கு நல்லது.