வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலர் தேர்தலை ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்க அக்கட்சி இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை 11:10 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 12:30 மணிக்கு முடிந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து பழனிசாமி பேசியுள்ளதாவது: சிறுபான்மையின மக்கள் ஓட்டு நமக்கு வராததால் இடைத்தேர்தலில் நமக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். கட்சிக்கு யார் வந்தாலும் சேர்க்க வேண்டும். பொதுச் செயலர் தேர்தலை முதலில் நடத்துவோம். அதன்பின் கட்சி அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பாக முறையான அறிவிப்பு வரும். இவ்வாறு பழனிசாமி பேசியதாக தெரிகிறது.
![]()
|
ஒரு மாதத்துக்குள் பொதுச் செயலர் தேர்தலை நடத்தி முடித்து ஆவணங்களை தேர்தல் கமிஷனில் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டப் பணிகளை ஒருங்கிணைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்சி தேர்தல் நடத்துவதற்காக பொதுச் செயலர் பழனிசாமி கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பழனிசாமி படங்கள் இடம் பெற்றுள்ளன.
கூட்டத்துக்கு வந்த மாவட்ட செயலர்களிடம் அவர்களது மொபைல் போன்களை அலுவலக ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர். கூட்ட அரங்குக்குள் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்றனர். கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் வெளியில் செல்வதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.