திருவள்ளுர்:திருவள்ளுர் அடுத்த ஈக்காடு கிராமத்தில், தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு தொண்டு நிறுவனம் சார்பாக, சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு, நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து பேசியதாவது:
இந்தியாவின் பாரம்பரியம் மிக்க சிறுதானிய வகைகளை, உலக மக்களிடையே பிரபலபடுத்தும் விதமாக, நடப்பு ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக, ஜ.நா., சபை அறிவித்துள்ளது.
நம் முன்னோர்களால், ஆதிகாலத்தில் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவில் முதலிடம் பிடித்த குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்ற சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
திருவள்ளுர் மாவட்டத்தில், 2.47 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டாலும், சிறுதானியங்கள் ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றன.
எனவே, விவசாயிகள் மூன்று பருவங்களிலும், நெற்பயிரை மட்டுமே தொடர்ந்து சாகுபடி செய்யாமல், மாற்றுப்பயிராக சிறுதானிய பயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமா மகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வேளாண்மை, எபினேசன், தொட்டிக்கலை பெண்கள் இணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சகாயமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.