வால்பாறை:உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என, வால்பாறை மக்கள் எதிபார்க்கின்றனர்.
வால்பாறை நகராட்சியில், கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், தி.மு.க., 20 வார்டுகளிலும், அ.தி.மு.க., ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை, இன்றைய மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வால்பாறை மக்கள் கூறியதாவது:
வால்பாறையில், தேயிலை தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது அரசு அறிவித்துள்ள, 425.40 ரூபாய் சம்பளம் வழங்க தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
தொழிலாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும். வால்பாறையில் படகு இல்லம் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி, கோடை விழாவுக்கு முன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தி மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் கிடப்பில் உள்ள வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
வால்பாறைக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரோப்கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வர வேண்டும்.இந்த பிரச்னைகளை மையப்படுத்தி, தேர்தலின் போது வாக்குறுதி அளித்த இன்றைய உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குறுதியை மறந்து விட்டனர்.
மக்கள் பிரச்னையை தீர்க்க குரல் கொடுக்க வேண்டும். நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
Advertisement