இன்று தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டியும், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸும் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்தித்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று மட்டும் நிகரமாக ரூ.2,061 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அதன் காரணமாக இச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ் 671 புள்ளிகளும், நிஃப்டி 176 புள்ளிகளும் இன்று சரிந்தன. துறை ரீதியாக பார்க்கையில், மின்சாரத் துறை குறியீடு 1% உயர்ந்தது. அதே நேரத்தில் தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட், கேபிடல் குட்ஸ் ஆகிய துறை குறியீடுகள் 1-2 சதவீதம் வரை சரிந்தன.
ஏன் இந்தச் சரிவு
கடந்த வாரத்தில் சரிவில் இருந்து மீண்டு மேலே வந்த பங்குச்சந்தைகள், 9, 10 ஆகிய இரு தேதிகளில் சரிவடைந்து கடந்த வார வெள்ளிக்கிழமை இருந்த நிலைக்கே சென்றுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கிக் குழுமப் பங்குகளின் சரிவு இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. எஸ்.வி.பி., பைனான்சியல் குரூப் தான், மிகப்பெரிய வணிக வங்கியான சிலிக்கான் வேலி வங்கியை நடத்துகிறது.
![]()
|
இந்நிறுவனம் பேலன்ஸ் ஷீட்டை வலுப்படுத்த ரூ.14,000 கோடி மதிப்பு அளவிற்கு பங்குகளை விற்பதாக அறிவித்தது. ஆனால் இதனை முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. இதனால் அவ்வங்கிப் பங்குகளை விற்று வெளியேற ஆரம்பித்தனர். விளைவு வியாழனன்று அவ்வங்கிப் பங்குகள் 60% அளவிற்கு சரிந்தது. சந்தை மதிப்பில் ரூ.6.4 லட்சம் கோடியை இழந்தது.
அமெரிக்க வங்கியின் வீழ்ச்சி, மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித உயர்வின் அளவைப் பற்றி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை அதிகரித்தது. பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த கூட்டம் மார்ச் 21 - 22ல் நடக்க உள்ளது. இதனால் உலகப் பங்குச்சந்தைகளில் விற்பனை காணப்பட்டது. அது உள்நாட்டுச் சந்தையிலும் வலுவாக எதிரொலித்தது.
பிப்ரவரி மாதத்திற்கான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. வேலைவாய்ப்பின்மையானது 3.6% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஜனவரியை காட்டிலும் பிப்.,யில் 1 லட்சம் பேர் கூடுதலாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது கலவையான தரவாக இருப்பதால், இதுவும் வட்டி விகித உயர்வை பாதிக்கும். அடுத்த வாரமும் ஏற்ற இறக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
எப்.ஐ.ஐ., டேட்டா
மார்ச் 10 அன்று எப்.ஐ.ஐ., மற்றும் எப்.பி.ஐ., எனும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.5,117 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். ரூ.7,178 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். இதன் மூலம் நிகர விற்பனை ரூ.2,061.47 கோடி.
டி.ஐ.ஐ., எனும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.5,167 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். ரூ.3,817 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இதன் மூலம் அவர்களது நிகர வாங்கல் ரூ.1,350 கோடியாக உள்ளது.
உள்நாட்டு முதலீட்டாளர்களும் விற்பனையை அதிகப்படுத்தியிருந்தால் பங்குச்சந்தை வெள்ளியன்று ரத்தக்களரி ஆகியிருக்கும்.