விக்கிரவாண்டி:குடும்பத் தகராறில் வீட்டை தீ வைத்துக் கொளுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி, 27. இவரது கணவர் பாலகிருஷ்ணன், 28. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சீதாலட்சுமி, சித்தணியில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறார்.
நேற்று முன் தினம் மாலை, சீதாலட்சுமியின் தாய் வீட்டை பாலகிருஷ்ணன் தீ வைத்துக் கொளுத்தினார். வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் , ஐந்து சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சீதாலட்சுமி அளித்த புகார்படி, விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.