கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னோடி திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை கவரும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், செய்தி மக்கள் தொடர்பு துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், உறுப்பினர்கள் வேல்முருகன் (பண்ருட்டி), சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), பிரகாஷ் (ஓசூர்), ராஜா (சங்கரன்கோவில்) மற்றும் உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். 17.03.2023 வரை பத்து நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் பார்த்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எஸ்.பி., மோகன்ராஜ், சட்டமன்ற பேரவை ஆய்வுக்குழு செயலாளர் சீனிவாசன், ஆய்வுக்குழு இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.