மாமல்லபுரம்:மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றின் உறுப்பினர்கள், தையல், எம்பிராய்டரி உள்ளிட்ட ஆடை தொழில்களில் பயிற்சி பெற்று, சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைக்க, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக பூம்புகார் நிறுவனம் முடிவெடுத்தது.
தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, மாமல்லபுரம் 'அக்னி சிறகுகள்' மகளிர் சுய உதவிக் குழு வளாகத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் இணைவது குறித்து, நேற்று விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
பூம்புகார் நிறுவனத்தின் மாமல்லபுரம் கிளை மேலாளர் அருண் தலைமையில் நடந்த முகாமில், மகளிர் சுய உதவிக் குழு கைவினைஞர்கள் பங்கேற்றனர்.
நல வாரிய செயல்பாடுகள், அதில் உறுப்பினராக இணைந்தால் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகள், பிற பயன்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
ஆதார், வயது ஆவணம், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பணிச் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பல குழுக்களின் உறுப்பினர்கள், நல வாரிய அட்டை பெற விண்ணப்பங்கள் அளித்து பதிந்தனர்.
சிற்பக் கலைஞர், பிற கைவினைக் கலைஞர் என, இருபாலரும் நலவாரியத்தில் உறுப்பினராகலாம் என, பூம்புகார் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.