வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வு வயதை, மீண்டும் 58 ஆக குறைக்க, அரசு ஆலோசித்து வருகிறது.
கொரோனா பரவல் காலத்தில், நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, 58ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வு வயது உயர்ந்தது.
இந்நிலையில், 55 வயதுக்கு மேலான போக்குவரத்து ஊழியர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு, பார்வை மங்கல், இதய பிரச்னை, நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள், நெரிசலில் பஸ்களை இயக்கவும், கூட்ட நெரிசலில் டிக்கெட் கொடுக்கவும் சிரமப்படுகின்றனர். இதனால், விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. ஓய்வு பெற முடியாத சூழலும் இருப்பதால், அதிக நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வதால், போக்குவரத்துக் கழகத்துக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு பழையபடியே, 58 வயதுடன் ஓய்வளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு ஓய்வு அளித்தால், அவர்களுக்கான பணப் பலன்களை வழங்க, 1,400 கோடி ரூபாய்க்கு மேல் தேவை. அதற்கான ஒப்புதலை நிதித்துறையிடம், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கோரி உள்ளனர். ஒப்புதல் கிடைத்ததும், ஓரிரு மாதங்களில், ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.