சென்னை:சுட்டெரிக்கும் வெயில், விவசாய மின் பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் தேவை நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு, 17 ஆயிரத்து 647 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. அதில் விவசாயத்தின் பங்கு 2,500 மெகா வாட். இம்மாதத்தில் வெயில் தாக்கம் கடுமையாகி வருகிறது.
இதனால் வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், இம்மாத துவக்கத்தில் இருந்து மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட் மேல் உள்ளது.
விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்த பிரிவுக்கான மின் தேவை மட்டும் கூடுதலாக, 727 மெகா வாட் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால், இம்மாதம் 4ம் தேதி காலை 10:30 மணிக்கு, மின் தேவை முதல் முறையாக 17 ஆயிரத்து 584 மெகா வாட்டாக அதிகரித்தது.
இதற்கு முன் சாதனை அளவாக, 2022 ஏப்., 29ம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, 17 ஆயிரத்து 563 மெகா வாட்டாக இருந்தது.
விவசாயத்திற்கான 18 மணி நேரம் மின் வினியோகம், இம்மாதம் 5ம் தேதி காலை 8:30 மணியில் இருந்து துவங்கியுள்ளது. நாளை முதல் பள்ளிகளில் பொது தேர்வு துவங்குவதால், வீடுகளில் மின் பயன்பாடு உயர்ந்துள்ளது.
இதனால், நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு, மின் தேவை எப்போதும் இல்லாத வகையில், 17 ஆயிரத்து 647 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது மட்டும் 1,000 மெகா வாட் உயர்ந்துள்ளது.
மத்திய தொகுப்பில் இருந்து, 5,800 மெகா வாட்; சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து 3,800; சொந்த அனல் மின் நிலையங்களில் இருந்து, 3,800 மெகா வாட் உள்ளிட்ட மின்சாரம் வாயிலாக, தேவையை வாரியம் பூர்த்தி செய்துள்ளது.