திருத்தணி:திருத்தணி தாலுகாவில், மொத்தம் 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் செல்லும் நந்தியாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஓடைகளில் அரசு அனுமதியின்றி மணல் மற்றும் 'எம் - -சாண்ட்' கடத்தி வருகின்றனர்.
இதை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கடத்தி வரும் மணல், 'எம் - -சாண்ட்' வாகனங்களை போலீஸ், வருவாய்த் துறையினர் திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர்.
பின், வாகனங்களில் இருக்கும் மணலை அலுவலக வளாகத்தில் கொட்டிவிட்டு, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய உடன் தங்களது வாகனங்களை உரிமையாளர்கள் கொண்டு செல்கின்றனர்.
அந்த வகையில், 20க்கும் மேற்பட்ட யூனிட் மணல் மற்றும் 'எம் - சாண்ட்' தாசில்தார் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த மணல் பல ஆண்டுகளாக அலுவலக வளாகத்தில் உள்ளது. இரவு நேரத்தில் மணலை சிலர் அள்ளிச் செல்கின்றனர். மேலும் மணல் வீணாகிறது.
ஆண்டுதோறும் பறிமுதல் செய்யப்பட்ட மணல், 'எம் - சாண்டை' பொதுப்பணித் துறை அதிகாரிகள் உதவியுடன் மதிப்பீடு தயாரித்து பொது ஏலம் விடப்படும். அந்த தொகை அரசு கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆனால், திருத்தணி தாசில்தார் அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக உள்ள மணலை பொது ஏலம் விடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாசில்தார் வளாகத்தில் குவிந்துள்ள மணலை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.