திருவள்ளூர்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர் வழியாக, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர், வியாபாரம் சம்பந்தமாக, டில்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், ரயிலில் செல்கின்றனர்.
இதற்காக, சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
குடும்பத்துடன் பயணிப்போர், மூட்டை, முடிச்சுகளுடன், முதியோர், குழந்தைகளை அழைத்துச் செல்ல சிரமப்படுகின்றனர்.
இதன் காரணமாக, கால விரயம், வீண் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே, கோவை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், ஒன்பது எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, நேற்று ரயில் பயணியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.