ஒடிசா தலைநகர், புவனேஸ்வரில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள சிறிய கிராமம் மங்கள் ஜோடி.
பறவை ஆர்வலர்களையும், புகைப்படகாரர்களையும் வெகுவாக கவர்ந்த கிராமமாக இருக்கிறது.
இங்குள்ள சில்கா ஏரியின் கரையில், 16 சதுர கி.மீ., பரப்புடைய நளபானா பறவைகள் சரணாலயம் உள்ளது.
நாட்டின் 'நம்பர் ஒன்' சரணாலயமாக விளங்குகிறது. குளிர் காலத்தில், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள், இங்கு முகாமிட்டு குஞ்சு பொறித்து கோடைக்கு முன் கிளம்புகின்றன.
பெரிய பூநாரைகள், வரித்தலை வாத்துகள், ஊசிவால் வாத்துகள், அன்றில்கள், கார்வெண் மீன்கொத்திகள், கழுகுகள் உட்பட 160க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வருகின்றன.
இந்த பறவைகள் உணவுக்காக, பாம்பு, மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடுவதை புகைப்படம் எடுக்க பலரும் குவிவர்.
அவ்வாறு, சென்னையில் இருந்து கடந்த வாரம், நளபானா பறவைகள் சரணாலயம் சென்ற குழுவில், இடம் பெற்றிருந்த புகைப்படக்கலைஞர் விஜயமூர்த்தி என்பவர், தான் எடுத்த படங்களை, 'தினமலர்' இதழுக்கு பிரேத்யேகமாக பகிர்ந்துள்ளார்.