சென்னை, ''அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்,'' என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசினார்.
சென்னை, அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர்களிடம், 'நான் முதல்வன்' திட்டத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்றார்.
அப்போது, மாணவர்களிடம் அவர் பேசியதாவது:
பத்தாவது மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படிக்க வேண்டும். நம் முன்னோர் நிகழ்த்திய அறிவியல் கண்டுபிடிப்புகளை போல, நாமும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும்.
அதுதான் நாம் கற்ற உண்மையான கல்வியாக இருக்கும். சாதனை படைத்த பலரைபோல், நம் பெயரும் சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சண்முகவேல் மற்றும் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.