வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், அமலாக்கத் துறை விசாரணையில், தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா நேற்று பங்கேற்றார்; அதே நேரத்தில், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, நிலத்தை லஞ்சமாக வாங்கிய வழக்கில், சி.பி.ஐ., அனுப்பிய, 'சம்மனை' பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஒதுக்கி தள்ளினார். இந்த லஞ்ச விவகாரங்களில் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த, விசாரணை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், 2021ல் மதுபான கொள்கை மாற்றப்பட்டது.
வழக்குப்பதிவு
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த விவகாரத்தில் மதுபான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்கள் இடையே சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த ஆம் ஆத்மியைச் சேர்ந்த புதுடில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை, சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த, 'இண்டோ ஸ்பிரிட்ஸ்' என்ற மதுபான ஆலையை நடத்தி வரும் அருண் ராமச்சந்திர பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.
'சவுத் குரூப்' எனப்படும் தென் மாநிலங்களைச் சேர்ந்த சிலர், புதுடில்லியில் மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்காக, ஆம் ஆத்மி கட்சிக்கு, ௧௦௦ கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
ஒன்பது மணி நேரம்
இந்தக் குழுவில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி மேலவை உறுப்பினரான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இது தொடர்பான விசாரணைக்கு, கடந்த 9ம் தேதி ஆஜராகும்படி கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அவர் அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், கவிதா நேற்று ஆஜரானார்.
அருண் ராமச்சந்திர பிள்ளை மற்றும் கவிதாவிடம் ஒரே நேரத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கவிதா தரப்பு வாதங்களையும் பதிவு செய்தனர். கவிதாவிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடந்தது.வரும், 16ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்கப் பட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், 2004 - 2009ல் காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.
அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலங்கள், லாலு பிரசாத், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, இவர்களது மகன்கள், மகள்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்தது.இது தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி மற்றும் 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, வரும் 15ம் தேதி புதுடில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, 16 பேருக்கும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்கில், லாலு மற்றும் ரப்ரி தேவியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர். லாலுவின் மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை, கடந்த4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது. அவர் அவகாசம் கோரியதால், நேற்று ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், குடும்ப சூழ்நிலையால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என, சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதி, சம்மனை தேஜஸ்வி ஒதுக்கித் தள்ளியுள்ளார்.இரண்டு மாநிலங்களின் மிகப் பெரும் கட்சிகளைச் சேர்ந்த இந்த வாரிசு தலைவர்களிடம், லஞ்ச விவகாரத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை முடிவு எடுத்துள்ளன.
வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய குடும்பத்தார் வீடுகளில், அமலாக்கத் துறை நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டது.இது குறித்து, அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது:இந்த சோதனையின்போது, கணக்கில் வராத 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊழல் வாயிலாக லாலு பிரசாத் குடும்பத்தினர், 600 கோடி ரூபாய் அளவுக்கு 'ரியல் எஸ்டேட்' உள்ளிட்டவற்றில் முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.வேறு எதில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அமலாக்கத் துறை கூறியுள்ளது.