இன்றைய காலத்தில் ஆணுக்கு பெண் நிகராக, ஏன் அதையும் மிஞ்சி பெண்கள் அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கின்றனர். குறிப்பாக விளையாட்டு துறையில் தமிழக பெண்கள் மாநில, தேசிய, உலக அளவில் பல சாதனைகளை புரிந்துள்ளனர்.
அவர்களின் வரிசையில், 'குண்டாய் இருக்கிறாயே.. உன்னால் விளையாட்டில் சாதிக்க முடியுமா..' என கேட்டவர்கள் வாயடைத்து போக அதனையே சாதகமாக்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பூரை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவி பி.மதுமிதா விடா முயற்சியால் குண்டு எறிதல் தேசிய போட்டியில் நான்கு பதக்கங்களும், மாநில அளவில் 26 பதக்கங்களும் குவித்துள்ளார்.
மாநில குண்டு எறிதல் போட்டியில் 14.62 மீட்டர் எறிந்து ஏற்கனவே இருந்த 13.87 மீட்டர் மாநில சாதனையை முறியடித்துள்ளார். கடந்த மாதம் ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடந்த தென்னிந்திய ஜூனியர் தேசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம், வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
தற்போது 2023 குடியரசு தினவிழா போட்டியில் தங்க பதக்கம், 4வது இளையோர் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம், தமிழ்நாடு ஜூனியர் ஓபன் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
மதுமிதா கூறியதாவது: தந்தை வேலுச்சாமி மண் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டர். அம்மா கோகிலாதேவி எனது பயிற்சிக்காக ஆசிரியர் வேலையை உதறிவிட்டு வீட்டை கவனிக்கிறார்.
சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஆனால் நீ குண்டாக இருப்பதால் எதுவும் முடியாது என்றனர். ஏழாம் வகுப்பு முதல் எடையை குறைக்க பயிற்சி செய்தேன். எனது உடல் வலிமைக்கு ஏற்ற குண்டு எறிதல் விளையாட்டை தேர்வு செய்தேன்.
அசுவரன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் அருண் வழிகாட்டுதலின் படி தினமும் காலை 6:00 முதல் 8:00மணி வரை பயிற்சி செய்கிறேன். தற்போது மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 50க்கு மேற்பட்ட பதக்கங்கள், கோப்பைகளை வென்றுள்ளேன். பள்ளிக் கல்வித்துறையில் மாநில போட்டிகளில் வென்று ரூ.2 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளேன்.
பஞ்சாப், ஹரியானா, அசாம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் விளையாடியுள்ளேன். ஆசியா, ஒலிம்பிக் போட்டிகளில் வெல்வதே வாழ்நாள் லட்சியம். நமக்குள்ளே சக்தி இருக்கு என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை விரட்டி விட்டால் வெற்றிக்கனியை பறிக்கலாம்.
இவரை வாழ்த்த 96558 83065