தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் கலைகளில் ஒன்று சிலம்பம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன் பனை ஓலை சுவடிளைத் தொகுத்ததில் கிடைத்தது கம்பு சூத்ரா. இதில் சிலம்ப சண்டைக் கோட்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியில் சிலம்பத்தை தடை செய்ததைத் தொடர்ந்து இந்திய தற்காப்புக் கலைகள் சரிவை சந்தித்தன. சுதந்திரத்திற்கு பின் தடை நீக்கப்பட்டது. இன்று சிலம்பம் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாக உள்ளது.
உலகளவில் சிலம்பத்தில் பல விருதுகளை பெற்று அசத்துகிறார் விருதுநகரை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஹரிபிரசாத். அவர் கூறியதாவது:
பத்து வயதில் ஜாக்கிசான் படங்களை பார்த்து சிலம்பத்தில் ஆர்வம் பிறந்தது.
பெயின்ட்டரான தந்தை பன்னீர்செல்வம் தான் முதல் குரு. அதன்பின் மோகன் என்பவரிடம் முறையாக பயின்றேன்.
நெற்றி மட்டத்தில் உள்ள மூங்கில் கம்பில் தான் முதல் பயிற்சி எடுத்தேன். 6 ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் மாவட்ட அளவிலான போட்டியில் பதக்கம் வென்றது தான் முதல் வெற்றி. பின் தேசிய அளவிலும் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
இந்தோ--நேபாள் உலக அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதை மறக்க முடியாது.
சிலம்ப பயிற்சியின் போது உடலை நிலை நிறுத்துவது முக்கியம். நெகிழ்வுத்தன்மை, சுறுசுறுப்பு, கை-கண் ஒருங்கிணைப்பு, சமநிலை, வலிமை, வேகம், தசை சகிப்புத்தன்மையை சிலம்பம் உள்ளடக்குகிறது.
இக்கலையை பலருக்கும் கற்றுக் கொடுத்து உலகளவில் சாதிக்க வைக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.
தற்போது மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன், என்றார்.
இவரை வாழ்த்த 99441 45103