வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து கணவருக்கு ஆதரவாக குடும்ப வருமானத்தை அதிகரிக்க கைத்தொழில் பழகிய ராமநாதபுரம் துர்க்கா இன்று பல தொழில் முனைவோரை உருவாக்கும் அளவு உயர்ந்துள்ளார்.
துர்காவின் சாதனை பயணத்தை அவரே சொல்கிறார்...
ராமநாதபுரத்தில் திருமணமாகி வந்த பின் கணவர்தான் எம்.ஏ., பி.எட்., படிக்க வைத்தார். டி.ஆர்.பி., எழுதினேன். கிடைக்கவில்லை. கணவருக்கு துணையாக நிற்க முடிவெடுத்த போது எனக்கு பிடித்த பேஷன் டிசைனிங் படிக்க விரும்பினேன்.
பேஷன் டிசைனிங் மற்றும் ஆறு மாதம் ஆரி டிப்ளமோ கோர்ஸ் படித்தேன். வீட்டில் இருந்து குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எனக்கு வரும் ஆர்டர்களுக்கு ஆரி வொர்க் செய்து கொடுத்தேன்.
ஆரி ஸ்டாண்ட், பிரேம், சில்க் த்ரட், பீட்ஸ், குந்தன் ஸ்டோன், சர்தோசி இவைதான் அடிப்படைதொழில் முதலீடு.பெரிய பணமுதலீடு இல்லாத இந்த தொழிலில் முதலீடு என்பது கற்பனை திறனும், அழகுணர்ச்சியும் தான்.
வீட்டில் இருந்தபடி டெய்லர்கள் கொடுக்கும் துணியில் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்கள் செய்து கொடுத்தேன். குழந்தைகள் முதல் பெண்கள் வரை...ஆண்கள் அணியும் குர்தா, சட்டைகளிலும் கூட ஆரிவேலைப்பாடுகள் வரவேற்பை பெற்றது.
துவக்கத்தில் 25 ஆயிரம் முதல் மாத வருமானம் கிடைத்தது. தற்போது முழு நேர வேலையாக செய்யும் பெண்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.
தற்போது நான் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். தமிழ்நாடு அரசின் சிறு குறு தொழில் மையத்தில் பதிவு செய்துள்ளேன். மத்திய அரசின் என்.சி.ஆர்.டி.,யில்'ஸ்கில் இந்தியா திட்டத்திலும் பதிவு செய்திருக்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புற பெண்கள் சுயதொழில் மூலம் அவர்கள் பொருளாதார தற்சார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.
குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்காக கைத்தொழில் பயிற்சி பெற்று தொழில் தொடங்கியவர் இன்று தனக்கு போட்டியாக மற்றவர்கள் வந்துவிடுவார்களோ என எண்ணாமல் அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பாராட்டப்பட வேண்டியதே.