முன்பெல்லாம் அரசியல் புள்ளிகள் அம்பாசிடர் காரில் சிவப்பு கொண்டை விளக்குடன், சைரன் ஒலிக்க வருவதே 'கெத்து' என நினைப்பர். பின்னர் கறுப்புபூனை போல 'கைத்தடிகள்' புடைசூழ வர வேண்டும் என நினைத்தனர். தற்போது 'பவுன்சர்கள்' எனப்படும் 'பீம்பாய்கள்' நடுவே 'கெத்தாக' வந்தால்தான் ஊரே நம்மை உற்றுப் பார்க்கும் என்கின்றனர்.
மைக்கேல் மதன காமராஜன் சினிமாவில் 'மதன்' கமலுடன் வரும் 'பீம்பாய்' போல, இன்று மதுரையில் நடைபெறும் எல்லா விழாக்களிலும் வி.ஐ.பி., எஸ்கார்ட் என்ற பெயரில் சபாரி உடை 'பவுன்சர்'கள் சரமாரியாக வலம் வருகின்றனர். பங்களாக்கள், தொழில் நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி சப்ளை போல, விழாக்களுக்கு பவுன்சர்களை அனுப்புவதும் தொழிலாகிவிட்டது.
இப்படி ஒரு அமைப்பின் நிறுவனர் சந்திரமோகன் என்ற முன்னாள் போலீஸ்காரர். ஊர்க்காவல் படையில் உள்ளவர்களைக் கொண்டு 'பவுன்சர்'களை உருவாக்கி நடத்தி வருகிறார்.
காதணி, கழுத்தணி... அதாங்க திருமணம் உட்பட பொதுக்கூட்டம், மாநாடு போன்ற எல்லாவற்றுக்கும் வி.ஐ.பி.,க்கள் வரும்போது அவர்களை கூட்ட நெரிசலில் சிக்காமல், சிதறாமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது இவர்கள் பணி. திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பு முதல் மணமக்கள் பாதுகாப்பு வரை இவர்கள் பார்த்துக் கொள்வர். சந்திரமோகன் கூறியதாவது: ஊர்க்காவல் படை வீரரான நான், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர் வீட்டு மணவிழாவில் என்னுடன் பணியாற்றிய பத்துபேருடன் பங்கேற்றேன்.
அனைவரும் வண்ண சபாரியுடன் வரவேற்பு முதல் சாப்பாடு, கவனிப்பு, பார்க்கிங் என கூட்டத்தை கட்டுப்படுத்தியது எல்லாமே நாங்கள்தான். இந்த சேவையால் மகிழ்ந்த மணவீட்டு நண்பர், எங்களை தலையில் துாக்கி கொண்டாடினார்.
அன்பளிப்பாக ஒருவருக்கு ரூ.300, 400 என தந்தனர். அதன்பின் ஊர்க்காவல் படையினர் சிலரை 60 நாள் பயிற்சி அளித்து, ஒரே நிறத்தில் சபாரி சீருடையில் இதனை தொழிலாக தொடர்ந்தோம். துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதித்தோரை பார்வையிட கமலஹாசன் சென்றபோது பாதுகாப்பிற்கு சென்றோம். மதுரை, விருதுநகரில் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் இல்ல விழாக்கள், அரசியல் கூட்டங்களில் பவுன்சர்கள் நாங்கள் எஸ்கார்ட் அதிகாரிகள் போல செயல்பட்டுள்ளோம்.
விழாக்களில் சாப்பாட்டுக்கென வரும் தேவையற்ற நபர்கள், திருடர்களை கண்டுபிடித்தும் கொடுத்துள்ளோம். விழாக்களுக்கு 5 பேர் என்றாலும், 150 பேர் என்றாலும் சீருடை, வாக்கி டாக்கியுடன் வருவோம். எங்களுக்கு அட்வான்ஸ் கூட தரவேண்டாம். எங்கள் சேவையில் 100 அல்ல 150 சதவீதம் திருப்தியடைந்தபின் கட்டணம் தந்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98421 06360