சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்று முறை தோல்வியை தழுவினாலும், தடைக்கற்களை உடைத்து படிக்கற்களாக மாற்றி நான்காவது முறை தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ்., ஆனேன் என காரைக்குடி ஏ.எஸ்.பி., ஆர்.ஸ்டாலின் தெரிவித்தார்.
பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து, நேர்மையான, துணிச்சலான நடவடிக்கைகளால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் அவர் கூறியதாவது:
சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம். அரசு பள்ளியில் 10ம் வகுப்பு, 15 கி.மீ., தொலைவில் உள்ள காஞ்சிபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 தமிழ் வழியில் படித்தேன். சென்னை அரசு கால்நடை பல்கலையில் பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்) முடித்தேன்.
அப்பா ராமகிருஷ்ணன், அம்மா கோடீஸ்வரி. விவசாய குடும்பத்தில் ஒரு அண்ணன், 2 அக்காவுடன் கடைக்குட்டியாக பிறந்தேன். பெற்றோர் விவசாயப் பணியுடன் பசுக்களும் வளர்த்தனர். பால் விற்பதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்தே நான்கு பேரும் நன்றாக படித்தோம்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று அண்ணன் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிகிறார். ஒரு அக்கா தாசில்தார், மற்றொருவர் துணை தாசில்தாராக உள்ளனர். இப்படி நான்கு பேருமே அரசுப்பணியில் உள்ளோம்.
அப்பா புத்தக வாசிப்பில் ஆர்வம் மிகுந்தவர். சென்னை புத்தக கண்காட்சி உட்பட பல்வேறு மாவட்ட புத்தக கண் காட்சிக்கு சென்று யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராவதற்கு புத்தகங்களை வாங்கி வருவார். முதலில் (2018) குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றேன். ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. என்னை எப்போதும் ஊக்குவித்துக்கொண்டே இருந்தவர்கள் அப்பாவும், அண்ணனும் தான்! 'உன்னால் ஐ.ஏ.எஸ்., ஆக முடியும்' என்ற நம்பிக்கையை அவர்கள் விதைத்தனர்.
யு.பி.எஸ்.சி., தேர்வில் ஆங்கிலம், ஹிந்தியில் கேள்விகள் இடம் பெறும். ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்ற அச்சம் தேவையில்லை. ஓரளவுக்கு ஆங்கிலம் பேச, எழுத தெரிந்திருந்தால் போதும். கால்நடை மருத்துவ படிப்பில் 2ம் நிலை மாணவராக தான் இருந்தேன். இருப்பினும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு முழு மூச்சாக தயார் செய்ததால் வெற்றி கிடைத்தது.
2019ல் இருந்து 2 ஆண்டு ஐதராபாத் போலீஸ் அகாடமி, உத்தரகாண்ட் மாநிலம் முசோரி போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்றேன். தொடர்ந்து 6 மாத களபயிற்சியை திருவாரூரில் எடுத்தேன். அங்கு தான் மக்களின் மனநிலை புரிந்து, எந்தவிதத்தில் சேவை செய்யலாம் என அறிந்தேன். 2022 அக்டோபரில் முதல் பணியாக காரைக்குடி ஏ.எஸ்.பி.,யாக பதவியேற்றேன்.
இந்த குறுகிய பணி காலத்தில் என்னை வருந்த செய்த சம்பவம் தேவகோட்டைபிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம். இதை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மாணவியை சீரழித்த 10 இளைஞர்களை கைது செய்தேன்.
போட்டித்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நான் சொல்வது இது தான்...
வெற்றியை தீர்மானிப்பது பாதை அல்ல. உங்கள் முயற்சி மட்டுமே. 12 மணி நேரம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை ஒருநிலை படுத்தி ஒரு பாட தொகுப்பை முடிக்க வேண்டும் என்ற இலக்கோடு 6 மணி நேரம் 'புரிந்து படித்தாலே' போதும்.
நாளிதழ்களை படிப்பதன் மூலம் பொதுஅறிவு விஷயங்கள் மனதில் இடம் பிடிக்கும். யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக நான் படித்த புத்தகங்கள் அனைத்தையும், எங்கள் கிராம நுாலகத்திற்கு வழங்கிவிட்டேன்.
விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு சென்றால், அங்கு இளைஞர்களுக்கு வகுப்பு எடுத்து ஊக்கப்படுத்துகிறேன். விடாமுயற்சி இருந்தால் தான் வீழ்ந்தாலும் மீண்டு எழமுடியும். விரைந்து வருவதை விட விழுந்தாலும் 'எழுந்து' வந்தேன் என்பதில் தான் வெற்றி. விழுந்த இடத்தில் எங்கே கவனத்தை சிதறவிட்டோம் என கவனித்தால் விழவே மாட்டீர்கள். 'முடிந்த வரை...' என்பதை விட 'வெற்றி அடையும் வரை' முயற்சியை கைவிடாதீர்கள், என்று தன்னம்பிக்கையூட்டுகிறார் இளம் எஸ்.பி., ஸ்டாலின் ஐ.பி.எஸ்.,
இவரை பாராட்ட...73972 41287.