ஈரோடு கிழக்கு தொகுதி காங்.,- எம்.எல்.ஏ., இளங்கோவன்: நான் எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, எங்கள்கட்சி எம்.எல்.ஏ., விஜயதரணிக்கு தனியாக அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும்; தவறு செய்து விட்டேன். அவரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்து, ஒருவேளை மீண்டும் பதவியேற்கும் சந்தர்ப்பம் வந்தால், முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன்.
டவுட் தனபாலு: சில வருஷங்களா இளங்கோவன் கோஷ்டி கானம் இல்லாம இருந்துச்சு... இந்தா, ஆரம்பிச்சுட்டாருல்ல... இனி, சத்தியமூர்த்தி பவன் பக்கம்சட்டை கிழிப்புகளுக்கும், வேஷ்டி உருவல்களுக்கும் பஞ்சம் இருக்காதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு, நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை; நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் போன்றோருக்கு நஷ்டஈடு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தினோம். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் உறுதி அளித்தார்.
டவுட் தனபாலு: ஒரு பிரச்னைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதே தீர்வு என்பதை, முதல்வரின் தந்தை கருணாநிதி அடிக்கடி சுட்டிக்காட்டுவார்... அந்த பிரச்னை தீருமா, தீராதா என்பது பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்... அவரது பாணியில் தனயனும் செயல்படுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
![]()
|
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி:அ.தி.மு.க., ஆட்சியில், என்.எல்.சி., நிர்வாகம், அத்துமீறி நிலங்களை கையகப்படுத்தஅனுமதிக்கப்படவில்லை. என்.எல்.சி.,யின் மக்கள் விரோத போக்குக்கு, தி.மு.க., ஆட்சி உறுதுணையாக இருப்பதுவேதனை அளிக்கிறது. மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி துாக்குவது போல, தங்கள் சுய லாபத்திற்காக நடிக்கும் தி.மு.க., ஆட்சியாளர்கள், என்.எல்.சி., விவகாரத்தில், மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானது.
டவுட் தனபாலு: தி.மு.க., அரசை திட்டுற சாக்குல, 'எங்களை மட்டும் இல்லை, தி.மு.க., அரசையும் மத்திய அரசு கொத்தடிமையா தான் நடத்துகிறது' என, மறைமுகமா பா.ஜ.,வுக்கு, 'பஞ்ச்' வைக்குறீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலுார் எம்.பி.,யுமான கதிர்ஆனந்த்: என் தந்தையை பார்த்து, 'சட்டசபையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க?' என, பிரதமர் மோடி கேட்டார். '54 ஆண்டுகள் என்றதும், 'வாட்... 54 இயர்ஸ்?' என, ஆச்சரியப்பட்டார். ஒரே தொகுதியில் பல முறை வென்றுள்ளதாக கூறியதற்கு, 'நம் நாட்டிலேயே, இந்த மாதிரி யாரும் இல்லை' என, பிரதமர் மோடி பாராட்டினார்.
![]()
|
சபாநாயகர் அப்பாவு: 'ஆன்லைன்' சூதாட்டம் தொடர்பாக, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க, கவர்னருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துவோர், கவர்னரை சந்தித்ததாக தகவல் வெளியானது. கவர்னர் முடிவுக்கு, ஏதோ ஒரு அழுத்தம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
டவுட் தனபாலு: பொறுப்பான, அதுவும் நடுநிலையான பதவியில இருக்கிற நீங்க, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில், யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டலாமா... கவர்னரை விமர்சிக்கிறப்ப, உங்களுக்குள்ள இருக்கிற தி.மு.க.,காரர் வெளியில வந்துடுறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
![]()
|
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி: 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என, சொல்வர். அதேபோல, தேர்தல் வேலைன்னு வந்துட்டா, அது செந்தில் பாலாஜி தான். மற்ற மாவட்ட செயலர்கள் பொறாமைப்படும் அளவுக்கு, அவர் தேர்தல் பணி செய்கிறார்.
டவுட் தனபாலு: 'கூந்தல் இருப்பவங்க அள்ளி முடியுறாங்க' என, கிராமங்களில் சொல்லுவாங்க... அவரிடம் இருக்கும் துறைகளின், 'வளம்' அப்படி... அதே துறைகளை, பாரம்பரியதி.மு.க.,காரர் ஒருத்தரிடம் கைமாத்தி விடுங்க... செந்தில் பாலாஜியையே துாக்கி சாப்பிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!