ஒய் காம்பினேட்டர் எனும் ஸ்டார்ட்அப்களுக்கு நிதி திரட்ட உதவும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் சிலிக்கான் வேலி வங்கியுடன் தொடர்புடையது. இந்த ஒய் காம்பினேட்டர் ஆதரவு பெற்ற ஸ்டார்ட்அப்கள் பலவும் தற்போது மூடப்பட்டுள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த நிறைய ஸ்டார்ட் அப்களும் இதில் அடக்கம். அவர்கள் தற்போது நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான பணத்தை எடுப்பதிலேயே சிக்கலை அனுபவிக்கிறார்கள்.
சிலிக்கான் வேலி வங்கியின் தாய் நிறுவனமான எஸ்.வி.பி., பைனான்சியல் குழுமம், மார்ச் 8 அன்று பங்குச்சந்தைக்கு ஒரு தகவலை வெளியிட்டது. அதன் போர்ட்போலியோவிலிருந்து 1.7 லட்சம் கோடி ரூபாய் பத்திரங்களை விற்றதாகவும், இதன் காரணமாக முதல் காலாண்டில் ரூ.14,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என தெரிவித்திருந்தது. இதன் காரணமாக வால் ஸ்டீரிட்டில் சிலிக்கான் வேலி வங்கிப் பங்குகளை அனைவரும் விற்க ஆரம்பித்தனர். விளைவு ஒரே நாளில் 60% சரிந்தது.
இது தவிர நிதி நெருக்கடிக்கு பயந்து, கோடிக்கணக்கான டாலர் டெபாசிட்டுகளை வங்கியிலிருந்து எடுத்தனர். இதனால் வங்கியை இழுத்து மூடிய அமெரிக்க வங்கிக் கட்டுப்பாட்டாளர்கள், அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் வங்கியை ஒப்படைத்தனர். இவர்கள் வங்கியின் சொத்துக்களை விற்று பணமாக்குவார்கள்.
நம்மூரில் ஒரு வங்கி திவாலானால் ரூ.5 லட்சம் வரை திரும்பக் கிடைக்கும். ஏனென்றால் தனிநபரின் ரூ.5 லட்சம் வரைக்குமான டெபாசிட்டுக்கு இன்சூரன்ஸ் உண்டு. அமெரிக்காவில் ஒரு வங்கி திவாலானால் 2.5 லட்சம் டாலர் திரும்பக் கிடைக்கும். நம்மூர் மதிப்பில் ரூ.2 கோடி. இவை உடனே கிடைத்துவிடும்.
![]()
|
இங்கு தான் இந்திய ஸ்டார்ட்அப்கள் சிலவற்றுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஒய் காம்பினேட்டர் மூலம் நிதி திரட்டிய அவர்கள் சிலிக்கான் வேலி வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் போட்டு வைத்திருக்கும் பணம் ரூ.2 கோடிக்கும் மேல் ஆகும். அதனை மீட்பதில் சிக்கல் ஏற்படும். இது நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் போன்றவற்றை பாதிக்கும்.
இன்னும் சில சிறிய ஸ்டார்ட்அப்கள் சிலிக்கான் வேலி வங்கியில் மட்டும் கணக்கு வைத்துள்ளனர். அவர்களது நிலைமை இன்னும் மோசமாகும். பல பெரிய ஸ்டார்ட்அப்கள் நிலைமையை உணர்ந்து முன்னரே பணத்தை வேறு நிறுவன வங்கிக்கு மாற்றியுள்ளன. ஒய் காம்பினேட்டர் ஆதரவு இந்திய ஸ்டார்ட்அப்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை சிலிக்கான் வேலி வங்கியில் ரூ.2 கோடிக்கு மேல் வைத்துள்ளன.