வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 400 ரன்களை கடந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து, 191 ரன்கள் பின்தங்கி இருந்தது. சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். கோஹ்லி (59), ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

4ம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. ஜடேஜா 28, ஸ்ரீகர் பரத் 44 ரன்களுக்கு அவுட்டாகினர். அதேநேரத்தில் சிறப்பாக ஆட்டத்தை தொடர்ந்த விராட் கோஹ்லி சதமடித்து அசத்தினார். அவர், 364 பந்துகளில் 186 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அக்ஷர் பட்டேல் 79 ரன் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 91 ரன் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து 2 வது இன்னிங்ஸை ஆட துவங்கிய ஆஸ்திரேலியா அணி 4 ம் நாள் ஆட்ட இறுதியில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்து 88 ரன் பின்தங்கி உள்ளது.