திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், மனைபிரிவுகள் உள்ளன.
சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் பகுதியாக இருந்தாலும், பயன்படுத்தப்படாத காலி இடங்களில், சீமை கருவேல மரங்கள் காடுபோல வளர்ந்துள்ளன.
நீராதாரத்தை பாதிக்க செய்யும் சீமை கருவேல மரங்களை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இத்தீர்மானம் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற அனுமதி அளித்தார்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாக நிதி பங்களிப்பில், ஊராட்சி தலைவர் தாரா, சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியை நேற்று துவக்கி வைத்தார்.
பணியாளர்கள், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக சீமை கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.