காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் தொடர்ந்துஈடுபட்டு வந்த, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மொத்தம், 570 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில், சிலர் திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு, வருவாய் கோட்டாட்சியர் வாயிலாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதாவது, சரித்திர பதிவேடு குற்றவாளிகள், தான் திருந்தி நன்னடத்தையில் வாழ விரும்புவதாக தாமாக முன்வந்து, கோட்டாட்சியரிடம் எழுதி கொடுக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து, ஒரு ஆண்டு நன்னடத்தையில் இருக்க அவர் உத்தரவிடுவார்.
ஆனால், மீண்டும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், நன்னடத்தை உத்தரவை மீறியதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
அந்த வகையில், 110 விதியின் கீழ், நன்னடத்தையில் இருக்க விரும்புவதாக, கடந்த 2022ல் 330 பேரும், நடப்பாண்டில் 142 பேரும் எழுதி கொடுத்துள்ளனர்.
இதில் நன்னடத்தையை மீறி, மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக, கடந்தாண்டு 23 பேரும், நடப்பாண்டில் இருவர் என மொத்தம் 25 பேர் கண்டறியப்பட்டனர்.
அவர்கள், 25 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூறியதாவது:
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் திருந்தி வாழவேண்டும் என விரும்பினால் அதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது.
அந்த வகையில் அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல் வாழ விருப்பம் உள்ளவர்கள் தானாக முன் வந்து கோட்டாட்சியர் முன்னிலையில் இனிமேல் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுக்க வேண்டும்.
அவர் எழுதி கொடுத்த பின் வெளியில் சுதந்திரமாக இருக்கலாம். அவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுகிறாரா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவார்கள்.
மீண்டும் அவர் குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தால், கோட்டாட்சியரிடம் எழுதி கொடுத்த நாளில் இருந்து, வெளியே இருந்த நாட்கள் வரை கழித்துவிட்டு, மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க வேண்டி வரும்.
மற்ற வழக்குகள் போல் மூன்று நாட்களில், ஜாமினில் வெளியில் வரமுடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் ஜாமின் பெறமுடியும். அங்கு எளிதில் ஜாமின் கிடைக்காது.
இவ்வளவு பிரச்னைகள் ரவுடிகளுக்கு உள்ளது. இதை உணராமல் மீண்டும் தவறு செய்த ரவுடிகள் தற்போது 25 பேர், தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.