பொன்னேரி : பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆறு, இரு கிளைகளாக பிரிந்து, பழவேற்காடு ஏரி வழியாக பழவேற்காடு பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் சென்று சேர்கிறது.
இந்த பகுதியில் மழைநீரை சேமிப்பதற்காக, 13 கோடி ரூபாயில், 130 மீ., நீளம், 0.75 மீ., உயரத்தில் தடுப்பணையும், அதன் மீது திறந்து, மூடும் வகையில், 11 ஷட்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
மழைக்காலங்களில் ஆற்று நீரை சேமித்து வைக்கவும், பழவேற்காடு உவர்ப்பு நீர் உள்புகுவதை தடுக்கும் வகையிலும் இந்த தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது.
தடுப்பணைக்கு முன்னும், பின்னும், 2 கி.மீ., தொலைவிற்கு ஆற்றுக்கரைகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மண் அரிப்பை தடுக்கும் வகையில், 240 மீ., நீளத்திற்கு கரையோரங்களில் கான்கிரீட் சுவர்களும் அமைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மழையின்போது தடுப்பணை பணிகள் முடிந்ததால், அதில், 0.20 டி.எம்.சி., மழை நீர் தேக்கி வைக்கப்பட்டது. தடுப்பணையில் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டதால், அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
கோடை வெயில் துவங்கியதால், தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் படிப்படியாக குறைந்து, நேற்றைய நிலவரப்படி, 0.10 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. வரும் ஆண்டில் மழையின்போது கூடுதல் தண்ணீரை சேமிக்க உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
தடுப்பணை மீது அமைக்கப்பட்ட இரும்பு ஷட்டர்கள் சோதனை பணிகள் நடைபெற்றதால், கடந்த ஆண்டு மழையின்போது கூடுதலாக தண்ணீர் சேமிக்கவில்லை.
இந்த ஆண்டு, 0.30 டி.எம்.சி., வரை தண்ணீரை சேமிக்க திட்டமிட்டு உள்ளோம். தற்போது தேங்கியுள்ள தண்ணீரால் நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மை குறைந்து உள்ளது. வரும் ஆண்டுகளில் உவர்ப்புத்தன்மை படிப்படியாக குறைந்து, நன்னீராக மாறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.