''ஏழைகளின் பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே காலம் கடத்தும் காங்கிரசுக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. கர்நாடகாவில் இரட்டைஇன்ஜின்களாக செயல்படும் மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களால் விரக்தியடைந்துள்ள காங்கிரஸ், பா.ஜ.,வையும், என்னையும் ஒழித்துக் கட்டகல்லறை தோண்டுகிறது,'' என, பெங்களூரு - மைசூரு, 10 வழிச் சாலையை திறந்து வைத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதால், வளர்ச்சி திட்டப் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மைதலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை ஒட்டி, பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகா வந்து வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்.
இந்நிலையில், ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று காலை மைசூரு விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
பேரணி
பின், ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர், மாண்டியா மாவட்டம், பி.இ.எஸ்., கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்திறங்கினார். அங்கிருந்து டாஸ்பாத் வரை 1.8 கி.மீ., துாரம் நடந்த பேரணியில் பங்கேற்றார்.
காரில் நின்றபடி, சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். அவர் மீது மக்கள் பூக்களை துாவி, 'மோடி, மோடி' என கோஷம் எழுப்பினர்.
டாஸ்பாதில், 8,480 கோடி ரூபாய் மதிப்பிலான பெங்களூரு - மைசூரு, 10 வழிச் சாலையை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த சாலை அமைக்கப்பட்டதன் வாயிலாக, பெங்களூரு - மைசூரு இடையிலான பயண நேரம், மூன்று மணி நேரத்திலிருந்து, 75 நிமிடங்களாக குறையும்.
இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கர்நாடக மாநிலம் வேகமாக முன்னேற வேண்டும். அதற்கு இரட்டை இன்ஜின் ஆட்சி தேவை. 10 வழிச் சாலை போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள், போக்குவரத்து வசதிக்கு மட்டுமின்றி, முதலீடு, வேலைவாய்ப்பு, வருவாயை ஈட்டும்.
கர்நாடகாவில் நெடுஞ்சாலை பணிகளுக்கு மட்டும் சில ஆண்டுகளாக, 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை இரு நகரங்களின் பயண நேரத்தை குறைப்பது மட்டுமின்றி, இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இரட்டை இன்ஜின்
கர்நாடகா, 4 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கொரோனா காலத்திற்கு பின், இரட்டை இயந்திர அரசுகளால் இது சாத்தியமானது. தகவல் தொழில்நுட்பம் தவிர, பயோ டெக்னாலஜி, பாதுகாப்பு, உற்பத்தியிலும் கர்நாடகா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஏழைகளின் பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே காலம் கடத்தும் காங்கிரசுக்கு, அவர்களின் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. எங்கள் இரட்டை இன்ஜின் அரசுகளின் வளர்ச்சி திட்டங்களால், விரக்தி அடைந்துள்ள காங்கிரஸ், பா.ஜ.,வையும், என்னையும் ஒழித்துக்கட்ட கல்லறை தோண்டுகிறது.
இரட்டை இயந்திர அரசுகளின் வளர்ச்சிப் பணிகள் வேகம் பிடித்துள்ளன. 10 வழி தேசிய நெடுஞ்சாலை குறித்து, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்த சாலையின் சர்வதேச தரம், நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்ற கர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை அடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளும், அதற்கான அடிக்கல் நாட்டும் விழாக்களும் வேகமாக நடந்து வருகின்றன.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக பேசினார்.கர்நாடகாவின் தார்வாடில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி பேசியதாவது:21ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான பசவேஸ்வரய்யா பிறந்த மண்ணுக்கு வந்துள்ளேன். அவருடைய பங்களிப்பில் முக்கியமானதான, அனுபவ மண்டபா எனப்படும் ஜனநாயக முறை குறித்து உலகெங்கும் விவாதம் நடக்கிறது.
இதனால் தான், இந்தியாவை மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதுடன், ஜனநாயகத்தின் தாய் என்றும் கூறுகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், பசவேஸ்வரய்யாவின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், அதே லண்டனில் இருந்து, நம்முடைய ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, துரதிருஷ்டவசமானது. நம் நாட்டின் ஜனநாயகம் நீண்ட பாரம்பரியம் உடையது; நம் வரலாற்றுடன் இணைந்தது. எந்த ஒரு வெளிநாட்டு சக்தியாலும், நம் ஜனநாயக பாரம்பரியத்தை உடைக்க முடியாது.இது தெரிந்தும், சிலர் தொடர்ந்து நம் நாடு குறித்தும், நம் ஜனநாயகம் குறித்தும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.இது, பசவேஸ்வரய்யாவை, கர்நாடக மக்களை, ௧௩௦ கோடி நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும். இது போன்றவர்களிடம் இருந்து கர்நாடக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
* பிரதமர் நரேந்திர மோடி தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'மலர் மழை பொழிந்து அன்பு காட்டிய மக்களுக்கு நன்றி' என குறிப்பிட்டு, மலர் துாவும் 'வீடியோ'வை இணைத்துள்ளார்
* மாண்டியா நிகழ்ச்சி முடிந்த பின், அங்கிருந்து ஹூப்பள்ளி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி சென்றார். 850 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மாநிலத்தின் முதல் ஐ.ஐ.டி., தார்வாட் வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
* ஹூப்பள்ளியில் ஸ்ரீசித்தாரூடா சுவாமிகள் ரயில் நிலையத்தில், 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1,507 மீட்டர் உலகின் நீளமான பிளாட்பாரத்தை திறந்து வைத்தார்
* விஜயநகர மாவட்டம் ஹொஸ்பேட் - ஹூப்பள்ளி - டினாய்கட் இடையே, 530 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ரயில் சேவையை கொடியசைத்தும், மறுசீரமைக்கப்பட்ட ஹொஸ்பேட் ரயில் நிலையத்தையும் திறந்து வைத்தார்
* ஹூப்பள்ளி - தார்வாட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை, 520 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கி வைத்தார்
* தார்வாடில், 1,040 கோடி ரூபாயில், கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தையும், துப்பரஹல்லாவில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களை குறைக்கவும், தடுப்புச் சுவர் கட்டவும், வெள்ளப் பாதிப்பு கட்டுப்பாடு திட்டத்துக்கு, 150 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் பேரணியின் ஒரு பகுதியாக, மாண்டியா நகரம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலையில் இருபுறமும் தடுப்புகள் போடப்பட்டன. இதனால், நெடுஞ்சாலை ஓரம் உள்ள நகராட்சி பள்ளியில், உறைவிடப் பள்ளிக்கான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.அப்போது, போலீசாருடன் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். பின், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே, மாற்றுப்பாதை வழியாக மாணவர்கள் தேர்வு மையத்துக்கு சென்றனர்.