- நமது டில்லி நிருபர் - காங்கிரஸ் எம்.பி., ராகுல், நம் நாடு குறித்து லண்டனில் பேசுகையில் கடும் விமர்சனங்களை முன் வைத்ததற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்டில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அலுவல்கள் பாதிக்கப்பட்டு, இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, நேற்று பார்லி.,யின் இரு சபைகளும் கூடின. லோக்சபா கூடியதுமே, மறைந்த எம்.பி.,க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடும் அமளி
பின், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காங்., - எம்.பி., ராகுல் இந்த சபையின் உறுப்பினர். அவர் சமீபத்தில் லண்டன் சென்றபோது பேசிய பேச்சு, இந்தியாவை அவமதிப்பதாக உள்ளது. அவரது பொறுப்பற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. இங்குள்ள அனைத்து எம்.பி.,க்களுமே, இந்தியாவை அவமதித்த ராகுலை கண்டிக்க வேண்டும்; அவர், சபையின் முன் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு, காங்., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பதிலுக்கு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், ''ராகுல் நம் நாட்டு ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கக் கூடாது. அன்னிய மண்ணில் இருந்து, சொந்த நாட்டிற்கு எதிராக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
அப்போது, காங்., - எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் போடத் துவங்கினர். இதனால், சபையில் கடும் அமளி ஏற்படவே, லோக்சபா உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவிலும் இதே விவகாரம் வெடித்தது.
கூச்சல்
சபை துவங்கியதுமே, பா.ஜ., - எம்.பி.,க்கள் ராகுல் குறித்த விவகாரத்தை கிளப்பினர். பதிலுக்கு, காங்., - எம்.பி.,க்களும் கூச்சலிட்டனர்.அப்போது பேசிய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ''மிக முக்கிய தலைவர் ஒருவரது பேச்சு வெட்கக்கேடானது. கொஞ்சமும் கூச்சமில்லாமல், அன்னிய மண்ணில் இருந்து தாய்நாட்டைப் பற்றி இழிவாக பேசிய அவர், நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்,'' என்றார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும், 'பிரதமர் நரேந்திர மோடியும் கூடத்தான், எத்தனையோ முறை முன்னாள் பிரதமர்கள், முந்தைய அரசுகளை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதெல்லாம் தவறில்லையா?' என எதிர் கேள்வி கேட்டு அமளியில் இறங்கினர்.
இதனால், சபையில் அமளி வெடித்து கூச்சல் நிரம்பவே, வேறு வழியின்றி ராஜ்யசபாவும் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.வெளியில் வந்ததும், நிருபர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:ராகுல், ராஜ்யசபாவைச் சேர்ந்த எம்.பி., அல்ல. அப்படியிருக்கையில், அவரைப் பற்றி இந்த சபையில் பேச வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?
முற்றுப்புள்ளி
சபை முன்னவரான அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, 10 நிமிடம் வரை பேசுவதற்கு அனுமதி கிடைக்கிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான எனக்கோ, வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் கிடைக்கிறது.இது எப்படி நியாயம்? எந்த வகையிலான விதிமுறைகளின்படி இவ்வாறு நடந்து கொள்கின்றனர்? யார் சொல்லி இதெல்லாம் நடக்கிறது? இது தான் ஜனநாயகத்திற்கான முற்றுப்புள்ளி; இதைத்தான் ராகுல் பேசினார்.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில், பார்லி., கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்பது தான் எங்கள் நிலைப்பாடு. அதை வலியுறுத்தி பேசினாலேயே, 'மைக்' இணைப்புகளை துண்டித்து விடுகின்றனர். அமளியும் துவங்கி விடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மதியத்துக்கு மேல், இரு சபைகளும் கூடின. அப்போதும், இதே விவகாரத்துக்காக அமளி கிளம்பியது. இதனால், அலுவல்கள் ஏதும் நடைபெற முடியாமல் போகவே, இரு சபைகளுமே ஒத்திவைக்கப்பட்டன.
சந்தேகம் தான்!காங்., ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்றன. இந்த கூட்டத்தை, திரிணமுல் காங்., புறக்கணித்து விட்டது. இதனால், மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு, நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் எதிரொலிக்குமா என்பதும் சந்தேகமாகியுள்ளது. வரும் நாட்களில், ராகுலின் விவகாரத்தை, இன்னும் தீவிரப்படுத்துவது என்று பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதனால், சபையின் நடவடிக்கைகள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.