வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகவதியம்மன் கோயில் திருவிழாவில் மாற்று மத பாடல் தவறுதலாக ஒலிபரப்பானதையடுத்து ரகளையில் ஈடுபட்டதாக ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் 36, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது டூவீலர் எரிக்கப்பட்டது.
வடமதுரை முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா சாட்டுதல் நிகழ்வு நேற்று முன் தினம் இரவு நடந்தது. இதற்காக பக்தி பாடல்கள் ஒலிபரப்பான போது தவறுதலாக மாற்று மத பாடலும் ஒலித்தது.
உடனடியாக அப்பாடல் நிறுத்தப்பட்ட நிலையில் அம்மன் சாட்டுதல் நிகழ்வுக்காக மக்கள் கூட்டம் போட்டு பேசி கொண்டிருந்தனர்.
அப்போது பால்கேணிமேடு ஹிந்துமுன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் மாற்று மத பாடலை எப்படி ஒலிபரப்பலாம் எனகேள்வி எழுப்பி மைக் செட் ஆப்பரேட்டரிடம் ரகளையில் ஈடுபட்டார். இதை பஜனை மடத்தெரு சுரேஷ் கண்டித்தார். அங்கிருந்தவர்கள் தவறுதலாக நடந்ததாக சமாதானம் செய்தனர்.
பின் ஈஸ்வரன் நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரளவும் டூவீலரை போட்டு விட்டு ஈஸ்வரன் தப்பினார். சிலர் ஈஸ்வரனின் டூவீலரை எரித்தனர்.
இதுதொடர்பாக 2 தரப்புக்கும் எதிராக வழக்குகள் பதிவு செய்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். சுரேஷ், கண்ணன், விக்கி உள்ளிட்ட சிலரை தேடுகின்றனர்.