நாகர்கோவில் : மின் கம்பி அறுந்து விழுந்தததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நேற்று காலை கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே லைனில் பூக்கடை பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் இந்த லைனில் ரயில்களை இயக்க முடியவில்லை.
சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன.
கன்னியாகுமரியில் இருந்து நேற்று காலை 8:40 மணிக்கு புறப்படயிருந்த புனே எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஐலன்ட் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிறகு இயக்கப்பட்டன.
திருவனந்தபுரம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. மின்கம்பிகள் சீரமைக்கப்பட்ட மதியத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து சீரானது. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
மின்கம்பி அறுந்ததற்கான காரணங்களை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.