கூடலுார் : ''தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட தண்ணீர் பிரச்னையை தீர்க்க முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தேனி மாவட்டம் கூடலுாரில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தலைவர் ராஜசேகர் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: கேரளாவில் ஆற்றில் மணல் அள்ளுவோர் குண்டாஸில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து மணல் கடத்துவது அதிகரித்து கனிம வளங்கள் குறைந்து வருகின்றன.
ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கியாக வேண்டும். இந்த அணையையொட்டிய பேபி அணையை பலப்படுத்த வேண்டும். இவை செய்தால் மட்டுமே 18ம் கால்வாய், 58 ம் கால்வாயில் நீர்வரத்து தொடர்ந்து இருக்கும். ராமநாதபுரத்திற்கும் தண்ணீர் பஞ்சம் வராது. மதுரை நகர் குடிநீருக்கும் பிரச்னை இல்லை. அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் லோயர்கேம்ப் மணிமண்டபத்தை சுற்றுலாத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.