சென்னையில் வெள்ள பாதிப்பைத் தடுக்க, 5,000 சதுர கி.மீ., நீளத்திற்கு மழை வெள்ள கண்காணிப்பு திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இதனால், வருங்காலங்களில் மழைநீர் வெள்ள பாதிப்பு குறைக்கப்படும் என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
� மழை வெள்ளத்தை தடுக்க கண்காணிப்பு திட்டம்
� 125 நீர்நிலைகள்; 74 நீர்வழித்தடங்கள் சேர்ப்பு
- நமது நிருபர் -
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில், நகர்ப்புற வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்த பயிலரங்கம் சமீபத்தில் நடந்தது.
இதில் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களின் கமிஷனர்கள், ஐ.ஐ.டி., கல்வி நிறுவன நிபுணர்கள் பங்கேற்றனர்.
அப்போது, ஒவ்வொரு பெருநகரங்களில், வெள்ள பாதிப்பு தடுப்பது குறித்து, அந்தந்த நிர்வாகங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று, சென்னையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கினார்.
மழைநீர் தேக்கம்
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், வருங்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஐந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால்கள், ஒரு மணி நேரத்திற்கு 4 செ.மீ., அளவில் மழைநீர் செல்லும் வகையில் இருந்தன.
தற்போது, ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 7 செ.மீ., வரை மழைநீர் செல்லும் வகையில் வடிகால்கள் அகலப்படுத்தப்படுகின்றன.
மேலும், மழைநீர் இல்லாத பகுதிகளில் புதிய கால்வாய் மற்றும் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கோவளம் வடிநிலை, கொசஸ்தலை ஒருங்கிணைந்த வடிகால் வாயிலாக, புதிதாக மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இதன் வாயிலாக, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறையும்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில், பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, மழைநீர் வடிகால்கள் துார் வாரும் பணி நடைபெறும். கடந்தாண்டு ஐந்து மாதங்களுக்கு முன் பணி நடந்தது. வரும் பருவமழைக்கு, தற்போதே துார் வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நிபுணர் குழு
அதேபோல், சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், சென்னையின் நிலப்பரப்பு அடிப்படையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு, துார் வாருதல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அதேபோல், மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில், மழைநீர் உறிஞ்சும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் வாயிலாக, வரும் காலங்களில் மழை வெள்ள பாதிப்பு குறைக்கப்படும்.
சென்னையில் அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலையாறு உள்ளிட்ட நான்கு வடிநிலப் பகுதிகளுக்கான வெள்ள கண்காணிப்பு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில் 125 நீர்நிலைகள் மற்றும் குளங்கள், 74 நீர்வழித்தடங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, 5,000 சதுர கி.மீ., பரப்பளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இதில், மழையின் போது, நிகழ் நேர தரவுகளைப் பெறுவது, மழை முன்னறிவிப்பு செய்வது, மழைநீர் வடிகால் மற்றும் தண்ணீர் தேங்கும் சாலைகள் தொடர்பான வரைபடங்களை காட்டுவது, ஏரிகள் செயல்பாட்டு திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வெள்ள கட்டுப்பாட்டு திட்டம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம், வரும் பருவமழைக்கு முன்னதாக செயல்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.