காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர் முதல், செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள புறவழி சாலையான, ஓரிக்கை மிலிட்டரி சாலை ஏழு கி.மீ., நீளமும், 5.5 மீட்டர் முதல் சில இடங்களில் 6 மீட்டர் அகலமும் கொண்டது.
கனரக வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமாரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நேற்று காலை 9:00 மணியளவில் ஓரிக்கை பகுதியில், சாலையோரம் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த மின்கம்பம் இரு துண்டுகளாக உடைந்தது. இருப்பினும் மின்கம்பம் சாய்ந்து விழாமல் நின்றதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த மின் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்தனர். தொடர்ந்து, சாலை விரிவாக்கம் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் உடைந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நடவு செய்யப்பட்டது.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த ஓரிக்கை மிலிட்டரி சாலையில், வாகனம் மோதி மின்கம்பம் உடைந்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.