ஆலந்துார், :ஆலந்துார் மண்டலத்தில், 16.4 கி.மீ., நீளத்திற்கு, 71 சாலைகள், 7.94 கோடி ரூபாய் செலவில் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
அதேபோல, 40.83 கோடி ரூபாய் மதிப்பில், 67 சாலைகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப் படுகின்றன.
மேலும், தொகுதி எம்.எல்.ஏ., நிதி, 75 லட்சம் ரூபாயில் பல்நோக்கு மைய கட்டடம், பேருந்து நிலைய தரைதளம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் நடந்த நிகழ்ச்சியில், இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
ஆலந்துார் மண்டலத்தில் ஆலந்துார், நங்கநல்லுார், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம் ஏரி விரைவில் சீரமைக்கப்படும்.
வரும் ஜூன் மாத இறுதியில் வேளச்சேரி- மவுன்ட் மேம்பால ரயில் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
நங்கநல்லுாரில், மாநகராட்சி இடத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. அதேபோல, நந்தம்பாக்கத்தில் மகளிர் கல்லுாரி கொண்டு வரும் நடவடிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 1.06 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாய்கள் இன கட்டுப்பாட்டு மையம், இரண்டு மாநகராட்சி பள்ளிகளின் கூடுதல் கட்டடங்களை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.
மண்டல குழு தலைவர் சந்திரன், மண்டல உதவிக் கமிஷனர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.