The gang that cornered the officer who was trapped alone... Tamannaah video police lament! | தனியாக சிக்கிய ஆபீசரை வளைத்த கும்பல்... தமன்னா வீடியோவால் போலீஸ் புலம்பல்!| Dinamalar

தனியாக சிக்கிய ஆபீசரை வளைத்த கும்பல்... தமன்னா வீடியோவால் போலீஸ் புலம்பல்!

Added : மார் 14, 2023 | |
பாரதியார் பல்கலைக்குச் செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் வண்டியில் போய்க் கொண்டிருந்தனர். மித்ரா வண்டியை ஓட்டிக் கொண்டே, 'நுாத்தி ரெண்டு, நுாத்தி மூணு' என்று ரோட்டோரத்தில் திரியும் தெரு நாய்களை எண்ணிக் கொண்டே வந்தாள். ஒன்றும் புரியாமல் சித்ரா கிண்டலாய்க் கேட்டாள்...''இப்ப எதுக்கு மித்து, ரோட்டுல இருக்குற நாய்களை எல்லாம் சென்சஸ் எடுத்துட்டு இருக்குற...
The gang that cornered the officer who was trapped alone... Tamannaah video police lament!   தனியாக சிக்கிய ஆபீசரை வளைத்த கும்பல்... தமன்னா வீடியோவால் போலீஸ் புலம்பல்!

பாரதியார் பல்கலைக்குச் செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் வண்டியில் போய்க் கொண்டிருந்தனர்.

மித்ரா வண்டியை ஓட்டிக் கொண்டே, 'நுாத்தி ரெண்டு, நுாத்தி மூணு' என்று ரோட்டோரத்தில் திரியும் தெரு நாய்களை எண்ணிக் கொண்டே வந்தாள். ஒன்றும் புரியாமல் சித்ரா கிண்டலாய்க் கேட்டாள்...

''இப்ப எதுக்கு மித்து, ரோட்டுல இருக்குற நாய்களை எல்லாம் சென்சஸ் எடுத்துட்டு இருக்குற... கார்ப்பரேஷன்ல கணக்கெடுக்குற வேலை ஏதாவது கொடுத்திருக்காங்களா?''

சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள் மித்ரா...

''நாமளே கணக்கெடுத்துக் கொடுத்தாலும், அவுங்க ஒண்ணும் பண்ணப் போறதில்லை...கார்ப்பரேஷன்ல எந்த மண்டலத்துல தெருநாய்கள் தொல்லை அதிகமா இருக்குன்னு, ஒரே குழப்பமா இருக்கு. ஏன்னா, எல்லா மண்டலக் கவுன்சிலர்களும் இதையே திரும்பத் திரும்பப் பேசுறாங்க. ஆனா கார்ப்பரேஷன் எதுவுமே பண்ற மாதிரித் தெரியலை!''

மித்ரா முடிப்பதற்குள் குறுக்கிட்ட சித்ரா, ''மண்டலத்துக்கு இடையில மட்டுமா...இந்த லொள்ளு பிரச்னை, ரெண்டு டவுன் பஞ்சாயத்துக்கு இடையில, எல்லை பிரச்னையாயிருக்கு தெரியுமா?'' என்றாள்.

மித்ரா புருவத்தை சுருக்கியதும், விளக்கினாள் சித்ரா...

''பெரியநாயக்கன்பாளையம், நம்பர் 4 வீரபாண்டி ரெண்டு பேரூராட்சி ஏரியாக்கள்லயும் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருத்துப் போயிருச்சு. இதை எப்பிடிக் கட்டுப்படுத்தணும்னு தெரியாம, ஒரு டவுன் பஞ்சாயத்து ஏரியாவுல இருக்குற நாய்களைப் பிடிச்சு, பக்கத்து டவுன் பஞ்சாயத்து ஏரியாவுல விட்டுர்றாங்களாம். இதுலயே ரெண்டு உள்ளாட்சிக்கும் இடையிலயும், பஞ்சாயத்து நடக்குதாம்!''

''மித்து! நாம போன வாரம் பேசுனது எப்பிடியோ சி.எம்.,காதுக்கே போயிருச்சு போலிருக்கு...நம்ம ஊருக்கு வந்த சி.எம்., திடீர்னு ரோட்டுல எல்லாம் இறங்கி ஆய்வு பண்ணிருக்காரு பார்த்தியா...அவர் கண்ணுல படாம, இந்த நாய்களை எப்பிடி மறைச்சு வச்சாங்களோ?''

''நம்ம பேசுனதை விடுங்க...நம்மூர் ரோடுகள் மோசமா இருக்கிறதைக் கண்டிச்சு, மாஜி அமைச்சர் வேலுமணி தலைமையில, ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கள்ல...அது சி.எம்., மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சிருச்சு போலிருக்கு.

எப்போ, கோயமுத்துாரு வந்தாலும், கார்ப்பரேஷன் கமிஷனரை பார்த்ததும், 'ரோடு போட்டுட்டீங்களா...எத்தனை கி.மீ., போட்டிருக்கீங்க'ன்னு கேள்வி கேட்ருவாராம்!''

''இதுக்குப் பேருதான், வெறும் கையில முழம் போடுறதுங்கிறது...சிட்டிக்குள்ள ரோடு போட நிதி கேட்டு, கார்ப்பரேஷன்ல இருந்து பைல் அனுப்பிட்டேதான் இருக்காங்க. முழுசாப் பணம்தான் வர்றது மாதிரித் தெரியலை!''

''ஆமாக்கா...! இந்த முறையும் அவர் கேட்டப்போ, அதைச் சொல்லிருக்காங்க. உடனே 'வாங்க...ரோடு எப்பிடி போடுறாங்கன்னு நேர்ல பார்க்கலாம்'னு கெளம்பீட்டாராம்.

மாவட்டச் செயலாளர் கார்த்திக் வீட்டுக்குப் போற வழியில, ஹட்கோ காலனியிலயும், சவுரிபாளையத்துலயும் போட்ட ரோட்டைப் பார்த்திருக்காரு.!''

''என்ன சொன்னாராம்?''

''அங்க நிக்கிற லேடீசைப் பார்த்து, 'என்னம்மா... எப்படி இருக்கீங்க...!'ன்னு கேட்டதும், அவுங்க சந்தோஷமாகி, 'அய்யா! நாங்க ஒரு முதல்வரை, இவ்ளோ நெருக்கமா பார்த்ததே இல்லீங்க'ன்னு சொல்லிருக்காங்க. அப்போ ஸ்கூல் ஸ்டூடண்ட் மாதிரி, ரெண்டு கையையும் கட்டிட்டு, அவுங்க சொன்னதைக் கேட்டுச் சிரிச்சாராம். சுத்தி நின்ன மினிஸ்டர்ஸ், ஆபீசர் எல்லாரும் சிரிச்சிருக்காங்க!''

''ரோடு எப்பிடியிருக்குன்னு கேட்கலையா?''

''ம்...'அதெல்லாம் இருக்கட்டும்மா... வேலை நடக்குதுங்களா...'ன்னு கேட்ருக்காரு. அதுக்கு அவுங்க, '2009ல போட்ட ரோடுங்க. பதினாலு வருஷம் கழிச்சு, இப்பதான் திரும்பப் போட்ருக்காங்க'ன்னு சொல்லவும், சந்தோஷமா கிளம்பீட்டாராம்!''

மித்ரா சொல்லி முடித்ததும், 'நான் சி.எம்.,விசிட்ல நடந்த பாலிடிக்ஸ் பத்திச் சொல்றேன்!' என்று 'டிரைலர்' உடன் ஆரம்பித்தாள் சித்ரா...

''சின்னியம்பாளையத்துல நடந்த கூட்டத்துல, கோவை செல்வராஜ் தலைமையில 10 ஆயிரம் பேரு இணையுறதா, மேடையில பெருசா பேனர் வச்சிருந்தாங்க. ஆனா, முதல்வர் உட்பட பேசுனவுங்க எல்லாரும், நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர்னுதான் சொன்னாங்க. ஆனா போட்ருந்த மூவாயிரம் சேர்கள் நிறையுறதுக்குக் கூட ஆளு இல்லையாம்!''

''காலி நாற்காலி எல்லாம் சி.எம்.,வர்றதுக்கு முன்னாடி எடுத்துட்டுப் போனாங்கன்னு கேள்விப்பட்டேன்!''

''உண்மைதான்...விழாவுல எக்ஸ் எம்.எல்.ஏ.,ஆறுக்குட்டிக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தாங்க. அவர்தான் ஆளுகளைக் கூட்டிட்டு வந்தாராம்.

ஆறுக்குட்டி பேரைச் சொல்றப்ப எல்லாம், விசில் சத்தம் வந்ததை சி.எம்., கவனிச்சாரு. எக்ஸ் எம்.பி., நாகராஜ், எக்ஸ் எம்.எல்.ஏ.,தினகரனுக்கு மேடையில சேர் போடவேயில்லை!''

''அது சரி....மினிஸ்டருக்கு 'டார்கெட் செந்தில் பாலாஜி'ன்னு சி.எம்., பட்டப் பேரு சூட்டுனாராமே?''

''ஆமாமா...ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல முழுப் பொறுப்பையும் நம்ம கிட்ட ஒப்படைப்பாங்கன்னு இவர் எதிர்பார்த்திருக்காரு. ஆனா நேரு, வேலுன்னு சீனியர் மினிஸ்டர்ஸ்ட்ட கொடுத்துட்டாங்க.

அவுங்க ரெண்டு பேரோட தலையீடும், ஏற்கனவே கோவையில அதிகமா இருக்கு. இனிமே இங்க விட்டா சிக்கல்னுதான், உதயநிதிக்கு ஒண்ணு, சி.எம்.,க்கு ரெண்டு நிகழ்ச்சின்னு அமர்க்களப்படுத்திருக்காரு!''

பேசிக் கொண்டிருந்த மித்ரா, தங்கள் வண்டியைக் கடந்து சென்ற போக்குவரத்துத்துறை ஜீப்பைப் பார்த்ததும், ஆர்.டி.ஓ.,ஆபீஸ் மேட்டருக்குத் தாவினாள்...

''அக்கா! ஆர்.எஸ்.புரத்துல இருக்குற, நுகர்வோர் அமைப்பு பேரை வச்சு ஒருத்தரு, சென்ட்ரல் ஆர்.டி.ஓ.,ஆபீஸ்ல ஏகப்பட்ட வேலைகள் பண்றாராம்...அதுக்கு முன்னாடி அவர் பண்ணுன 'ஸ்டிங் ஆபரேஷன்'தான் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்!''

''சொல்லு...சொல்லு!''

''ஒரு பைக்கை எப்.சி.,பண்ணனும்னு, பிரேக் இன்ஸ்பெக்டர்ட்ட போயிருக்காரு...முழுசா பெயின்டிங், சர்வீஸ் பண்ணிட்டு வந்தால்தான், எப்.சி.,போடுவேன்னு திருப்பி அனுப்பீட்டாராம். அதே பைக்கை, எதுவுமே பண்ணாமல், ஒரு புரோக்கர் மூலமா கொண்டு போய், பணம் கொடுத்து, அதே பிரேக் இன்ஸ்பெக்டர் கையெழுத்தோட எப்.சி.,வாங்கீட்டாராம். இதையெல்லாம் ரிக்கார்டும் பண்ணிருக்காரு!''

''ஆஹா...சூப்பரு!''

''ஜே.டி.சி.,ட்ட இந்த விஷயத்தை, அப்பிடியே புகாராக் கொண்டு போயிருக்காரு. விசாரணையில, எல்லாம் உண்மைன்னு தெரிஞ்சிருச்சு.

பிரேக் இன்ஸ்பெக்டர் அந்த கன்ஸ்யூமர் அமைப்புக்காரர்ட்ட கெஞ்சிக் கேட்டு, கம்பிளைன்ட்டை வாபஸ் பண்ண வச்சிருக்காரு.

இப்போ, சென்ட்ரல் ஆபீஸ்ல அவருக்கு எல்லாரும் சலாம் போடுறாங்க. எப்.சி., ரீ ரிஜிஸ்ட்ரேஷன்னு பல வேலைகளைப் பார்த்து, நல்லா பணம் பண்றாராம்!''

''ஆர்.டி.ஓ.,ஆபீசைப் பத்திப் பேசுனதும், டிரைவர் மேட்டர் ஞாபகம் வந்துச்சு. நம்ம ஊருல சிவில் சப்ளை பறக்கும் படை தாசில்தாரா இருக்கிறவருக்கு, ஜீப் இருக்கு, டிரைவர் இல்லை.

ஆக்டிங் டிரைவர் போட்டு, ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கப் போயிருக்காரு. டிரைவர்கள் கடத்தல்காரங்களோட 'டீலிங்' போட்டு, 'எஸ்கேப்' ஆக விட்ருக்காங்க. அப்புறம் அவுங்களைக் கூப்பிடுறது இல்லையாம்!''

''இப்போ ரெய்டுக்கே போறதில்லையா?''

''யாருமே வேணாம்னு, அவரே ஜீப்பை ஓட்டிட்டுப் போயி, ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைப் பிடிக்கப் போயிருக்காரு. அங்க போயி, வண்டியையும் பாத்துட்டாராம்.

ஆனா 15 பேர் கொண்ட கும்பல் அவரைச் சுத்திருக்கு. உடனே உசிரைக் கையில பிடிச்சிட்டுத் தப்பிச்சு வந்திருக்காரு. இதை மேலிடத்துலயும் சொல்லலையாம். டீக்கடையில பிரண்டுகிட்ட புலம்பிட்டு இருந்திருக்காரு!''

''வரவர நம்ம ஊருல, ரவுடிங்க தலை துாக்குறாங்களோன்னு பயமா இருக்கு...ரெண்டு ரவுடிங்க 'கேங்' மோதல்ல ரெண்டு மர்டர் ஆயிருச்சு...அதுல இருந்தே சிட்டி போலீஸ் இன்னும் மீண்டது மாதிரித் தெரியலை.

காட்டூர் ஏ.சி., வின்சென்ட்டை மாத்திட்டு, கணேசன்னு ஒருத்தரைப் போட்டாங்க. ரத்தினபுரி இன்ஸ்பெக்டரா ராஜ்குமாரை நியமிச்சாங்க...ரவுடிகளை இவுங்க அடக்குவாங்களான்னு தெரியலை!''

''எனக்கு நம்பிக்கையில்லை...போன வாரம் இங்க வந்த டி.ஜி.பி.,சைலேந்திரபாபு, 'போலீஸ்காரங்களுக்கு துப்பாக்கி, லத்தி ரெண்டும் கொடுத்திருக்கோம்.

எதை எப்போ பயன்படுத்தணும்னு, அவுங்கதான் முடிவு பண்ணனும்'னு சொல்லிட்டுப் போயிருக்காரு...ஆனா, வீடியோ போட்ட ரவுடி கவுதம், தமன்னாவை இப்ப வரைக்கும் பிடிக்க முடியலை. அதுலயும் அந்தப் பொண்ணு சேட்டை ஓவர்னு போலீஸ் புலம்புறாங்க!''

சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, அசுர வேகத்தில் கடந்த சேம்பர் லாரியைப் பார்த்த மித்ரா, ''அக்கா! தடாகம் ஏரியாவுல செங்கல் சூளையெல்லாம் மூடுனதும், ஆடு, மாடு வளர்க்குறது அதிகமாயிருக்கு. போன வாரம் சூளை நடத்துற ஒருத்தரு, மாடுகளைக் கட்டிருக்குற இடத்துக்கே யானை வந்து தீவன மூட்டைகளை துவம்சம் பண்ணிட்டுப் போயிருக்கு!'' என்றாள்.

''ஆனா 'தடாகத்துல யானை வழித்தடமே இல்லை'ன்னு சொல்லி, மறுபடியும் சூளைகளைத் திறக்க, தீவிரமா வேலை நடக்குதாமே... அதனால, யானை வந்து என்ன பண்ணுனாலும் சூளைக்காரங்க வெளியிலயே சொல்ல மாட்டாங்க... இந்த சூளைக்காரங்களுக்கு விவசாயிகள் சங்கத்துக்காரங்க சில பேரும், உதவி பண்றதாவும் ஒரு தகவல் வருது. யாரை நம்புறதுன்னே தெரியலை!''

''அக்கா! யுனிவர்சிட்டியில வி.சி.,இல்லாமல், நிர்வாகமே 'கொலாப்ஸ்' ஆயிருக்காம். எந்த கன்ட்ரோலும் இல்லையாம்.

துணைவேந்தர் குழுவுல இருக்குற எல்லாருமே புரபசர்ங்கிறதால, மத்தவுங்க மதிக்கிறதே இல்லை. இவுங்களுக்குள்ள நடக்குற ஈகோவுல, ஒரு வேலையும் நடக்கிறதில்லை.

குழுவுக்கு தலையா இருக்குற, டிபார்ட்மென்ட் செகரட்டரியும் கண்டுக்கிறதேயில்லையாம். சிண்டிகேட் மெம்பர்ஸ் எல்லாம் புலம்பித் தள்ளுறாங்க!''

மித்ரா சொல்லி முடிப்பதற்குள், பாரதியார் பல்கலைக்குள் வண்டி நுழைந்தது. இருவரும் வண்டியையும், பேச்சையும் நிறுத்தி விட்டு, மெயின் பில்டிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X