அரியலூர்: ‛எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம்' என கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி.
அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி உயிரை மாய்த்த மாணவி ‛அனிதா'வின் பெயரில் புதிய அரங்கம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: நீட் தேர்வு ரகசியத்தை கூறுமாறு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அந்த ரகசியம் வேறொன்றுமில்லை. எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், அந்த ரகசியம். இப்போது அனிதாவின் பெயரில் அந்த அரங்கம் திறக்கப்படுகிறது. அந்த அரங்கத்தையும், அதன் பெயர் பலகையை பார்க்கும்போதும் நீட் தேர்வு ரத்து தான் உங்களுடைய நினைவிற்கு வரவேண்டும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை சட்டப் போராட்டம் தொடரும். கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்தபோதும், நீட் ரத்து குறித்து கோரிக்கை விடுத்தேன். அவர் நீட் தேர்வின் நன்மைகள் குறித்து பல்வேறு காரணங்களை கூறினார். ஆனால் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும்வரை சட்டப்போராட்டத்தை தொடர்வோம் என இறுதியாக சொல்லிவிட்டு தான் வந்தேன். அதுதான் அந்த ரகசியம். இவ்வாறு அவர் பேசினார்.