ராமேஸ்வரம்:கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஏழு நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இலங்கை முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்தினர்.
பெங்களூரைச் சேர்ந்த பிரசாந்த், ராஜசேகர், சிவரஞ்சனி, மஞ்சரி, சுசிதா உட்பட ஏழு பேர், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள். மேலும், நீச்சல் பயிற்சி பெற்றவர்கள்.
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்த முடிவு செய்தனர். இதற்கான 12ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் இலங்கை சென்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு தலைமன்னார் கடலில் குதித்து 23 கி.மீ., துாரம் நீந்தி மாலை 3:40 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தனர்.
முதலில் அஜித், சுமா ராவ் ஆகிய இருவரும் நீந்தத் துவங்கினர். அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதும், அடுத்த வீரர், வீராங்கனைகள் கடலில் குதித்து நீந்தினர். இறுதியாக பிரசாந்த், மஞ்சூரி நீந்தி கரையை அடைந்தனர்.