திட்டக்குடி:திட்டக்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 11 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து, தி.மு.க.,வை சேர்ந்த 11 கவுன்சிலர்கள், நேற்று முன் தினம் காலை, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். கவுன்சிலர்கள் நிராகரித்த திட்ட பணிகளை நிர்வாகம் செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தகவலறிந்து வந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த திட்டக்குடி நகராட்சி தலைவர் வெண்ணிலா, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் ஆகியோர் கவுன்சிலர்களிடம் சமரசம் பேசினர்.
அப்போது நகராட்சி கவுன்சிலர்களுக்கும், கமிஷனர் ஆண்டவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த கவுன்சிலர்கள் தகாத வார்த்தையில் பேசிய நகராட்சி கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தினர்.
மாலை 5:00 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு, திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா, கவுன்சிலர்களின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.