'விளையாட்டு போட்டிகளிலாவது ஜெயித்து விடலாம்; இந்த அரசியல் போட்டியில் ஜெயிக்க முடியாது போலிருக்கிறதே...' என புலம்புகிறார், பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான விஜேந்திர சிங்.
இவர், சீன நாட்டின் பீஜிங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், குத்துச் சண்டையில் வெண்கல பதக்கம் வென்று சாதித்தவர். அதற்கு பின், அரசியல் ஆசை வந்ததால், ௨௦௧௯ லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், காங்கிரசில் இணைந்தார்.
உடனடியாக, தெற்கு டில்லி லோக்சபா தொகுதியில் போட்டியிடவும் காங்., தலைமை இவருக்கு வாய்ப்பு அளித்தது. அந்த தேர்தலில், இவரால் வெற்றி பெற முடியவில்லை.
ஆனாலும், காங்கிரஸ் சார்பில், ஹரியானா மாநிலத்தில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறார். 'என் சொந்த மாநிலமான ஹரியானாவில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருந்தால், கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன்...' என்றும் கூறி வருகிறார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், விஜேந்திர சிங்கை காங், மேலிடம் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், சமீபத்தில் நடந்த ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்று, தன் விசுவாசத்தை காட்டினார். அப்படியிருந்தும், 'அடுத்த தேர்தலில், பிரசாரம் வேண்டுமானால் செய்யுங்கள். 'சீட்' கொடுக்க முடியாது...' என, காங்., மேலிடத்திலிருந்து தகவல் வந்ததால், மிகவும் சோர்வடைந்துள்ளார், விஜேந்திர சிங்.
'குத்துச்சண்டையில் எத்தனை பேரை வீழ்த்தி உள்ளேன். இந்த அரசியல் களத்தில் சாதிக்க முடியவில்லையே...' என, கவலைப்படுகிறார், விஜேந்திர சிங்.