காஞ்சிபுரம்:காஞ்சி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கட்டுப்பாட்டில், 380 சிறிய ஏரிகளும், 2,112 குளங்களும் உள்ளன.
இந்த நீர்நிலைகளில் இருந்து நீர் இருப்பு குறைவாக காணப்படும் போது, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளத்தை மேம்படுத்த, மாட்டு வண்டி, டிராக்டர் போன்ற வாகனங்களில், அரசு நிர்ணயித்த அளவுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள, கனிமவளத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்களது சுயமுகவரியிட்ட வெள்ளைத்தாளில், நிலம் அமைந்துள்ள இடம், எந்த ஏரியின் பாசன பரப்பு, வண்டல் மண் எத்தனை ஏக்கருக்கு தேவை, ஆதார், பட்டா நகல், டிராக்டர் வண்டியின் பதிவு நகல் போன்ற ஆவணங்களை கிராம நிர்வாகஅலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஏரி வண்டல் மண் விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியுடன் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து, நில உடமை குறித்து சரிபார்க்கப்பட்டு சான்று பெற வேண்டும்.
பின்னர், காஞ்சிபுரம்கனிமவளத் துறை உதவி இயக்குனருக்கும், தாசில்தார் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையிலும், நீர் இருப்பு அளவின் அடிப்படையிலும், வண்டல் மண் எவ்வளவு எடுக்க முடியும் என்ற விபரம் கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
தற்போது, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.