காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாதந்தோறும் இரண்டு செவ்வாய்க்கிழமைகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு, குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, திட்ட இயக்குனர் செல்வகுமார், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், ஸ்ரீபெரும்புதுார் காங்.,- எம்.எல்.ஏ.,செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 310 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கிய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
நேற்று நடந்த கூட்டத்தில், வருவாய்த் துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு, 25.50 லட்ச ரூபாய் மதிப்பிலான, இலவச வீட்டு மனை பட்டாக்களை, அமைச்சர் அன்பரசன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும், சாலை, தண்ணீர் தொட்டி போன்று, 32 வகையான பணிகளுக்கு, பணி உத்தரவுகளை அந்தந்த ஊராட்சி தலைவர்களிடம் அமைச்சர் வழங்கினார்.